சென்னை:

ண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை  நடிகர் கமல்ஹாசன் நேரில்  சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

எண்ணூர் கழிமுகத்தை உதாசினப்படுத்தினால் வட சென்னைக்கு ஆபத்து ஏற்படும் என்று நடிகர் கமல்ஹாசன் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

அதில்,  கொசஸ்தலையாறு சென்னை அருகே இன்னும் முழுவதும் சாக்கடையாகாமல் மீனவர்களின் வாழ்வாதாராமாக உள்ளது. அது கூவம் அடையாற்றைவிட பன்மடங்கு பெரிய ஆறு. அதன் கழிமுகத்தின் 1,090 ஏக்கர் நிலத்தை சுற்றுச்சூழல் சிந்தனையில்லா சுயநல ஆக்கிரமிப்பாளர்களால் இழந்துவிட்டோம்.

வல்லூர் மின் நிலையமும், வட சென்னை மின் நிலையமும் தங்கள் சாம்பல் கழிவுகளை கொசஸ்தலை ஆற்றில் கொட்டுக்கின்றன. இதை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல வருடங்களாக போராடியும், அரசு பாராமுகமாய் உள்ளது. மீனவர்கள் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து குரலெழுப்ப முற்பட்டதும் செவிடர் காதில் ஊதிய சங்குதான் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை திடீரென வடசென்னையில் உள்ள  எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார்.

டுவிட்டரில் மட்டுமே கருத்து தெரிவித்து வந்த கமல் முதன் முறையாக களத்தில் இறங்கியிருப்பது அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.