மாங்காடு ஸ்ரீ காமாட்சியம்மனின் மகிமை நிகரற்றது. மாங்காட்டில் காமாட்சி அம்மன் எழுந்தருளியதன் பின்னணியில் உள்ள புராண வரலாற்றை அறிந்து கொள்ளலாம். காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி, மதுரை மீனாட்சி என்று அகிலமெல்லாம் போற்றிப் புகழ்வது போன்றே மாங்காடு காமாட்சியம்மன் கோயிலும் பிரசித்தி பெற்றதாகும்.

இத்தலத்தைச் சுற்றிலும் வடவத்தீஸ்வரன் கோயில், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த திருவேற்காடும், கீர்த்தனைகள் பல பாடி புகழ் பெற்ற சுந்தரரேசுவரின் கோயில் உள்ள கோவூரும், சேக்கிழார் அவதரித்த குன்றத்தூரும் வேறு பல தலங்களும் மாங்காட்டைச் சுற்றி அமைந்துள்ளன.

ஆனந்தம், ஆறுதல், அமைதி இம்மூன்றையும் ஒருங்கே தரவல்ல தெய்வீகத் திருத்தலம்தான் மாங்காடு. மாமரங்கள் நிறைந்த மாமரக்காடாக விளங்கியமையால் இத்தலம் மாங்காடு என்னும் காரணப் பெயர் பெற்றது.

இந்த ஆம்ராரண்யத்தில், ஒற்றை மாமரத்தடியில், ஸ்ரீ காமாட்சி அம்மன் தவம் புரிந்து, பின்னர் காஞ்சியிலே ஈசனை மணம் புரிந்து கொண்டதாக ஐதீகம். மாங்காடு தலத்திற்கு ஒரேயரு முறை வந்து விட்டால் போதும், அதன் பின்னர் நம்மையறியாமல் நம் மனம் மாங்காட்டிற்கு நம்மை செலுத்தும்.பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அனுபவப்பூர்வமான உண்மை.

இத்திருக்கோயிலில் அர்த்த மேரு பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. இந்த அர்த்தமேரு, ஸ்ரீ சக்கர எந்திரம் சந்தனம், அகில், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, கோரோசனம், சிலாஜித், ஜடா மஞ்சீ, கச்சோலம் போன்ற எட்டு வகையான வாசனைப் பொருள்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அர்த்தமேருவிலேயே அன்னை வாசம் செய்கின்றாள்.