கள்ளக்குறிச்சி:
னியாமூர் பள்ளியில் இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்கியது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள சக்தி இண்டெர்நேஷனல் என்ற தனியார் பள்ளியில் கடந்த ஜூலை மாதம் 13ம் தேதி கடலூரை சேர்ந்த பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து 17ந்தேதி வன்முறை வெடித்தது. வன்முறையாளர்கள் பள்ளிக்குள் புகுந்து சூறையாடியதுடன் பள்ளி பேருந்துகளையும் தீ வைத்து எரித்து நாசப்படுத்தினர். இதில் சில அமைப்புகள் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து பள்ளி மூடப்பட்டது. இதனால் அந்த பள்ளியில் படித்து வந்த மாணவ மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியானது. பின்னர் நீதிமன்ற உத்தரவுபடி ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் என பெற்றோர்களும், பள்ளி நிர்வாகமும் கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பான வழக்கு உயர்நிதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்றைய விசரணையைத் தொடர்ந்து, முதல்கட்டமாக கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் தொடங்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மற்ற வகுப்புகளை தொடங்குவது குறித்து ஒரு மாதத்திற்கு பிறகு முடிவெடுக்கப்படும் என உயர் நீதிமன்றம் நீதிபதி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். அத்துடன், பள்ளிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, முதற்கட்டமாக 9-12ஆம் வகுப்புக்கு நேரடி வகுப்புகள் நடைபெற உள்ளன. பள்ளியில் உள்ள ‘ஏ’ மற்றும் ‘பி’ பிளாக்குகளை மட்டும் பயன்படுத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.