சிவ மாதவ் இயக்கத்தில் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘3.6.9’. இப்படத்தில், முக்கிய காயதாபாத்திரத்தில் பிளாக் பாண்டி, அஜய் கண்ணன், சுகைல், சத்தி மகேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வில்லன் கதாபாத்திரத்தில் படத்தின் தயாரிப்பாளர் பிஜிஎஸ் நடத்துள்ளார். ஒளிப்பதிவு மாரிஸ்வரன், இசை கார்த்திக் ஹர்ஷா, பட தொகுதி ஆர். கே. ஸ்ரீநாத், கலை இயக்கம் ஸ்ரீமன் பாலாஜி ஆகியோர் இப்படத்தில் பணிபுரிந்துள்ளனர்.
இத்திரைப்படம், 81 நிமிடங்களில் உருவாக்கப்பட்டு உலக சாதனை புரிந்துள்ளது.
புதுச்சேரியை அடுத்த கிருமாம்பாக்கம் பிள்ளையார்குப்பத்தில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் இன்று கடந்த டிசம்பர் 15 காலை 11.40 மணிக்கு தொடங்கிய படப்பிடிப்பு, மதியம்1.01 மணி வரை தொடர்ச்சியாக 81 நிமிடங்கள் நடந்தது.
ஒரே நேரத்தில், ஒரு களத்தில் 24 கேமராக்கள், 150க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைள், 450 பணியாளர்களை கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டது.
நாலேஜ் இன்ஜினியரிங் என்ற அமைப்பின் நிறுவனர் ஹரிபா ஹனிப் நடுவராக இருந்து 81 நிமிடங்களில் படமாக்கப்பட்ட இத்திரைப்படத்தின் உருவாகத்தை நேரடியாக பார்வையிட்டு, அமெரிக்காவை தலையிடமாக கொண்டு செயல்படும் வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் என்ற அமைப்பிற்கு உலக சாதனைக்கு பரிந்துரை செய்தார்.
அதன்படி, வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் என்ற அமைப்பு, சாதனையாக ஏற்றுள்ளது.
இது குறித்து படத்தின் இயக்குனர் சிவ மாதவ் கூறுகையில்,‘‘ ‘3.6.9’படம் கதாநாயகி, சண்டை காட்சிகள், பாடல்கள் இல்லை. ஆனால், படத்தை பார்க்கும்போது இவை அனைத்தும் இடம் பெற்றிருக்கின்ற உணர்வை ஏற்படுத்தும்.
தமிழில் பல்வேறு கதை அம்சங்கள் கொண்ட திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் இந்தப் படம் மாறுபட்ட நிலையில் இருக்கும். இப்படத்தில் ஹாலிவுட் தரத்துக்கு இணையான தொழில் நுட்பங்களை கொண்டு படம் பிடிக்கப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க விஞ்ஞானம் சார்ந்த படமான இதில் ரசிகர்கள் எதிர்ப்பாக்கக்கூடிய சுவாரசியங்கள் அனைத்தும் இடம்பெற்றிருக்கும். 81 நிமிடங்களில் படமாக்கப்பட்ட இப்படம், திரைக்கு வரும்போது 2 மணி நேர நீண்ட படமாக இருக்கும். எதிர்காலத்தில் விஞ்ஞானதின் மாறுபட்ட தொடக்கமாகவும் இப்படம் அமையும்” என்றார்.
இந்நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடந்தது.
அப்போது நடிகர் ஆரி, “சமீபத்தில் விஜய் நடித்த பீஸ்ட் மற்றும் கன்னட மொழிமாற்றுப் படம் கேஜிஎப் 2 ஆகியவை வெளிவந்து ஓடிக்கொண்டு இருக்கின்றன.
இந்த நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் சிலர், பீஸ்ட் படம் குறித்து எதிர்மறையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
விமர்சனம் செய்வது பத்தரிகையாளர்கள், பொதுமக்கள் உரிமை.
ஆனால், திரைப்படத்தை வெளியிடும் திரையரங்க உரிமையாளர்கள் இப்படி எதிர்மறையாக விமர்சனம் செய்யக்கூடாது” என்று பேசினார்.
அடுத்து பேசிய கே.பாக்யராஜ், “விமர்சனம் செய்பவர்கள் சிலர் மென்மையாகச் சொல்வார்கள். சிலர் கடுமையாக சொல்வார்கள். நாம் அதைப் பற்றி பொருட்படுத்தாமல், அந்த விமர்சனத்தில் உள்ள விசயங்களை கவனிக்க வேண்டும். அடுத்த முறை அந்தத் தவறு நடக்காமல் நடந்துகொள்ள வேண்டும். மற்றபடி பிறரை விமர்சிக்காதீர்கள் என்றோ இப்படி விமர்சிக்காதீர்கள் என்றோ சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என ஆரிக்கு அறிவுரை கூறினார்.