மலையாளத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான ‘அடி கப்பியாரே கூட்டமணி’ என்கிற படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இப்படத்தை டிரைடண்ட்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ஆர் . ரவீந்திரன், ஹாஸ்டல் என்ற பெயரில் தயாரித்து உள்ளார்.
சுமந்த் ராதா கிருஷ்ணன் இயக்கத்தில், அசோக் செல்வன் – பிரியா பவானி சங்கர் ஜோடியாக நடித்துள்ளனர்.
நாசர், சதீஷ், கிரிஷ் குமார், முனிஸ்காந்த், ரவி மரியா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர்.
படத்திற்கு போபோ என்பவர் இசையமைத்து உள்ளார்.
படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
இதில் பேசிய நாயகன் அசோக் செல்வன், “ஆரம்பத்தில் ரீமேக் படத்தில் நடிக்க வேண்டுமா என யோசித்தேன். ஆனால் இயக்குநர் சுமந்த், தமிழில் நிறைய மாற்றங்கள் செய்துள்ளதாக கூறினார். தவிர, கொரோனோ முடிந்த இந்த காலகட்டத்தில், மக்களுக்கு காமெடியான லைட் சப்ஜெக்ட் படம் அளித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். மேலும், நாயகி ப்ரியாவுக்கு இந்தப் படத்தின் மீது ரொம்ப நம்பிக்கை இருந்தது. அதோடு, தயாரிப்பாளர் டிரைடன்ட் ரவியுடன் இணைந்து வேலை செய்ய வேண்டும் என நினைத்திருந்தேன்.
ஆக இத்தனை காரணங்கள் இந்தப்படத்தில் நான் நடிக்கக் காரணம்.
இந்தப் படத்தில் எனது பெரிய ஆசை ஒன்று நிறைவேறி இருக்கிறது. இது வரை நான் நடித்த படங்களில் கானா பாடல்கள் இருந்தது இல்லை. ஆனால் அப்படிப்பட்ட பாடலில் ஆடி நடிக்க விரும்பினேன்.
இந்தப் படத்தில் இரு கானா பாடல்கள் உள்ளன. நடனமும் ஆடி இருக்கிறேன். ரசிகர்களின் வரவேற்பைப் பொறுத்து நடனம் ஆடுவது குறித்து முடிவெடுப்பேன்” என்றார் அசோக் செல்வன்.