சென்னை: தமிழகஅரசு ‘ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாள்’ என கடந்த ஆண்டு அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் கொண்டாட பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. ஜூலை 18-ந் தேதியை தமிழ்நாடு நாளாக அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு, ஒன்பது ஆண்டுகள் கழித்து 1956, நவம்பர் 1-ம் தேதி மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்போது `மெட்ராஸ் பிரசிடென்ஸி’ என்ற பெயரில் இணைந்திருந்த கர்நாடகத்தின் சில பகுதிகளும், ஆந்திராவின் சில பகுதிகளும் நவம்பர் 1-ம் தேதியன்று பிரிக்கப்பட்டு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா என உருவாகின. பிரிக்கப்பட்ட அன்றுதான் தமிழகத்தின் சில பகுதிகள் கர்நாடகத்துக்கும், கேரளத்துக்கும், ஆந்திராவுக்கும் சென்றுவிட்டன. இதனால் அண்டை மாநிலங்களைப் போலவே தமிழகத்தில், தமிழ்நாடு நாள் நவம்பர் 1-ம் தேதி கொண்டாடப்பட வேண்டும் என ஒரு தரப்பினரும், `மெட்ராஸ் பிரசிடென்ஸி’ என்ற பெயரை “தமிழ்நாடு’ என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ம் நாள்தான் உண்மையான தமிழ்நாடு தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என்ற கருத்துக்களும் உள்ளன.

இந்த சர்ச்சைகளுக்கு இடையே கடந்த ஆண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,  ஜூலை 18-ம் நாள்தான் தமிழ்நாடு நாள் என சட்டமன்றத்தில் அறிவித்தார்.  மேலும்,, ஜூலை 18-ம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும்’ என்று அறிவித்தார்.  ஸ்டாலினின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் அரங்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் தமிழ்நாடு என்று பேரறிஞர் அண்ணாவால் பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18-ந் தேதியை தமிழ்நாடு நாளாக அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அன்றைய தினம் தமிழ்நாடு உருவான வரலாறு தொடர்பான சுவரொட்டிகளை பள்ளிகளில் காட்சிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.