பாட்னா: பீகார் மழைவெள்ளத்தைக் கையாண்டது தொடர்பாக, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் மீது குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, ஐக்கிய ஜனதா தளம், பதிலுக்கு, மத்திய அமைச்சரை மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

பீகாரில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் இதுவரை 72 பேர் இறந்துள்ளனர். முக்கியமாக தலைநகர் பாட்னா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிலைமையை சரியாக கையாளாமல் போனதற்காக, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் மன்னிப்புக்கோர கடமைப்பட்டுள்ளது என்று பேசினார் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்.

இதனையடுத்து, ஐக்கிய ஜனதாதளம் சார்பில் கடுமையான பதிலடி வந்துள்ளது. நிதிஷ்குமாரின் கால் தூசுக்கு சமமில்லாதவர் கிரிராஜ் சிங் என்றும், சிவனின் பெயரை உச்சரித்தால் மட்டுமே ஒருவர் தலைவராகிவிட முடியாது என்றும் சாடியுள்ளது அக்கட்சி. தனது பேச்சின்போது அடிக்கடி சிவனின் பெயரை உச்சரிப்பது மத்திய அமைச்சருக்கு வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பாட்னா வெள்ளத்திற்கு பா.ஜ. கட்சியே காரணம் என்றும் ஐக்கிய ஜனதா தளம் குற்றம் சாட்டியுள்ளது. பாட்னா மேயர் பதவி, அந்த நகருக்குள் அடங்கும் சட்டமன்ற தொகுதிகளின் உறுப்பினர் பதவிகள், மக்களவை உறுப்பினர் பதவிகள் மற்றும் கூட்டணி அரசில் மாநில அரசின் நகர்ப்புற வளர்ச்சித் துறை ஆகியவற்றை பாரதீய ஜனதாக் கட்சியே நீண்டகாலம் வைத்திருந்ததால், பாட்னா மழை வெள்ளத்திற்கு அக்கட்சியேப் பொறுப்பு என்று ஐக்கிய ஜனதா தளம் சரமாரியாகப் பாய்ந்துள்ளது.