புதுடெல்லி: போரில் மரணமடைதல் மற்றும் 60% க்கும் மேல் ஊனமடைதல் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டு வந்த இழப்பீடு 4 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இனிமேல் அத்தகைய பாதிப்புகளுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.2 லட்சம் இழப்பீட்டுத் தொகை, இனிமேல் ரூ.8 லட்சமாக வழங்கப்படும்.

போரில் மரணமடைதல், 60%க்கும் மேல் ஊனமடைதல், ஊனம் காரணமாக ராணுவ சேவையை விட்டு வெளியேறுதல் போன்றவற்றுக்கு இழப்பீடாக ரூ.2 லட்சமும், 60%க்கும் குறைவாக ஊனமடைந்தால் ரூ.1 லட்சமும் வழங்கப்பட்டு வந்தது.

ராணுவப் போர் காயமடைந்தோர் நல நிதியின்(ABCWF) கீழ் இந்தத் தொகை வழங்கப்படும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ABCWF நிதி கடந்த 2017ம் ஆண்டு ஜுலை மாதம் உருவாக்கப்பட்டது. முன்னாள் ராணுவத்தினர் நலத்துறையின் கீழ் இந்த நிதி உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு சியாச்சன் கிளேசியர் பகுதியில் 10 வீரர்கள் புதையுண்டதை அடுத்து, ABCWF நிதி, 2016ம் ஆண்டே நடைமுறை ரீதியாக அமலுக்கு வந்துவிட்டது.