சென்னை,

றைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக டிராபிக் ராமசாமி மற்றும் இருவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து அதிமுக தொண்டர் ஜோசப், சமூக சேவகர்  டிராபிக் ராமசாமி மற்றும் நாகை மாவட்டத்தை சேர்ந்த ஞானசேகரன் ஆகியோர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவில், ‘ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து பல சந்தே கங்கள் தமிழக மக்கள் மத்தியில் உள்ளன. எனவே, அவரது மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ, சிறப்பு புலனாய்வுபிரிவு அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் கொண்ட ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை உருவாக்கி, விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, ஜெ. மரணம்  விசாரணை குறித்து  மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பு செயலாளர் மணிராம் சார்பில், சென்னை உயர்நீதி மன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், ‛ விசாரணை குழு அமைக்க, மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. மாநில அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது. எனவே, இந்த வழக்கில் இருந்து மத்திய அரசை விடுவிக்க வேண்டும்’ என, கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.