சென்னை: பாதுகாப்பு படை வீரர்கள் பயணம் செய்த பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயற்சி முறியடிக்கப்பட்ட நிலையில், மற்றொருபுறம் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலின்போது 2 பயங்கரவாதிகள் என்கவுன்டர் செய்யப்பட்ட நிலையில், பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் சத்தா முகாம் அருகே இன்று காலை 4.25 மணியளவில் பணிக்காக 15 சிஐஎஸ்எஃப் வீரர்களை ஏற்றுக்கொண்டு ராணுவப் பஸ் சென்றுள்ளது. அப்போது திடீரென பஸ்சின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். உடனடியாக பஸ்சில் இருந்த வீரர்கள், பயங்கரவாதிகளுக்கு அதிரடியா பதிலடி கொடுத்தனர். இதனால் பயங்கரவாதிகள் தப்பி ஒடிவிட்டனர். இதையடுத்து அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

அதே வேளையில், ஜம்மு நகரத்தில் உள்ள சுஞ்ச்வான் கன்டோன்மென்ட் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அவர்களை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர்  ஈடுபட்டனர். அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒரு பாதுகாப்புப்படை வீரர் வீர மரணம் அடைந்தார். மேலும் நான்கு வீரர்கள் படுகாயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி வரும் ஞாயிற்றுக்கிழமை ஜம்முவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அதை தடுக்கும் வகையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், பயங்கரவாதிகளை வேட்டையாடுவதில் பாதுகாப்பு படை தீவிரமாக செயலாற்றி வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஜம்மு-காஷ்மீர் முழுவதும் பயங்கரவாதத் தாக்குதல் எதுவும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்புப் படையினர் 24 மணி நேரமும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.