ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நட்சத்திரப் பிரமுகரும், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான முன்னாள் நடிகை ரோஜாவுக்கு, ஆந்திர அமைச்சரவையில் ஏன் இடம் கிடைக்கவில்லை? என்பதற்கு பலவிதமான காரணங்கள் கூறப்படுகின்றன.

ஜாதி அடிப்படையில் ரெட்டி சமூகத்தைச் சேர்ந்த ரோஜாவுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படவில்லை என்று ஒருபுறம் கூறப்படும் நிலையில், ரோஜா ஆதரவாளர்களின் ஓவர் அலப்பறையால், ஜெகன்மோகனின் தாயார் விஜயம்மாள் மற்றும் சகோதரி ஷர்மிளா ஆகியோருக்கு ரோஜாவை அமைச்சரவையில் சேர்ப்பதில் விருப்பமில்லை எனவும் கருத்துக்கள் வெளிவருகின்றன.

ஆனால், இதையெல்லாம் தாண்டி, ஆந்திர அரசியலைப் பொறுத்தவரை மற்றொரு அம்சத்தையும் கவனமாக அலச வேண்டியுள்ளது. தமிழகத்தின் பிரச்சினைதான் அங்கும். அதாவது, அரசியலில் சினிமாவின் செல்வாக்கு.

சினிமாக்கார பின்னணி கொண்ட ரோஜாவை, பெரிய பிரச்சார பீரங்கியாகப் பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டாலும், அமைச்சரவையில் சேர்த்து துணை முதல்வராகவோ அல்லது அமைச்சராகவோ ஆக்குவதென்பது இன்னொரு தேவையற்ற ரிஸ்க் எடுப்பதற்கு சமம்.

என்.டி.ராமராவை மிகவும் சாமர்த்தியமாக, ராஜதந்திரத்துடன் ஓரங்கட்டி நாற்காலியைப் பிடித்தார் அவரின் மருமகன் சந்திரபாபு நாயுடு. 16% வாக்குகளையும், 18 சட்டமன்ற உறுப்பினர்களையும் 2009ம் ஆண்டு முதல் முயற்சியிலேயே பெற்ற கப்பு சமூகத்தைச் சேர்ந்த சிரஞ்சீவியை, மிகத் திறமையாக காலி செய்தார் ஜெகன்மோகனின் தந்தை ராஜசேகர ரெட்டி.

சினிமாவைப்போல் அரசியலிலும் அதிரடியாக வளர்ந்துவந்த விஜயசாந்தியை, நேரம் பார்த்து ஓரங்கட்டினார் சந்திரசேகர ராவ். இப்படி, சினிமா நட்சத்திரங்கள் குறித்த வரலாறு ஆந்திர அரசியலில் வரிசை கட்டி நிற்க, ஜெகன்மோகன் ரெட்டி அதில் அவ்வளவு எளிதில் சோடைபோகமாட்டார் என்றே நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில், சினிமாவிலிருந்து வந்தவரும், சிரஞ்சீவியின் தம்பியுமான பவன் கல்யாணின் போட்டியையும் சமாளித்துள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி. இந்நிலையில், தேவையின்றி இன்னொரு சினிமா நட்சத்திரத்திற்கான வெளிச்சத்தை, அமைச்சர் பதவியின் மூலம் அதிகரிப்பது ஆபத்தென்பதை தெளிவாகப் புரிந்தே இருக்கிறார் ஜெகன்மோகன்.

அமைச்சர் பதவிக்குப் பதிலாக, ஆந்திர அரசின் தொழிற்சாலை கட்டுமான கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் ரோஜா. இதைவொரு புத்திசாலித்தனமான சமாதான முயற்சி என்றே குறிப்பிடலாம். இதன்மூலம் தேவையற்ற சலசலப்பு குறைக்கப்பட்டதோடு, அதிருப்தியின் மூலமாக ஏற்படும் உடனடி பின்விளைவுகளும் தடுக்கப்பட்டுள்ளன.

நடிகர்களை கையாளும் விஷயத்தில், தமிழக அரசியல்வாதிகளைவிட, ஆந்திர அரசியல்வாதிகள் அதிக புத்திசாலித்தனத்துடன் செயல்படுகிறார்கள் எனலாம். அங்கே, என்.டி.ராமராவுக்குப் பிறகு யாருக்கும் இடமில்லாமல் போயுள்ளது. நடிகர் சிரஞ்சீவி சிறிய அதிர்வை உண்டாக்கிவிட்டு ஒதுங்கிவிட்டார். தற்போது, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பவன் கல்யாணுக்கும் தேர்தலில் எதுவும் நடக்கவில்லை.

ஆனால், தமிழ்நாட்டிலோ, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா தொடங்கி, விஜயகாந்த், சீமான் மற்றும் கமலஹாசன் என, தொடர்ச்சியாக லைம் லைட்டில் இருந்துகொண்டே உள்ளனர் சினிமாக்காரர்கள். ரஜினிகாந்த் இனிமேல் வரவேண்டியுள்ளது.

ரோஜாவை ஆந்திர மாநிலத்தில் அமைச்சராக்கியிருந்தால், அதைப் பயன்படுத்தி வேறுநிலைக்கு வளர்ந்துவிடுவார் ரோஜா. பின்னர், அவரே ஜெகன்மோகனுக்கு புதிய தலைவலியாகவும் எதிர்காலத்தில் உருவெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அரச அதிகாரத்தில் பங்குபெற்ற நிலையிலான முன்னாள் நடிகை ரோஜாவின் செயல்பாடுகள், பவன் கல்யாணின் வாய்ப்புகளையும் உயிர்ப்புடன் வைத்திருக்க உதவலாம்.

சினிமா பிரபலம் என்ற பின்புலத்தை ஏற்கனவே வைத்திருக்கும் ரோஜா, அரச அதிகாரத்தின் மூலமாக, தனக்கான செல்வாக்கு வட்டத்தை இன்னும் விரிவடையச் செய்தால், ஜெகன்மோகன் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டதாகிவிடும் என்பதால், தனது தந்தையின் அரசியல் செயல்பாடுகள் மற்றும் இதர ஆந்திர அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் ஆகியவற்றிலிருந்து கற்றுக்கொண்ட பாடத்தை, தற்போது நடைமுறைப்படுத்தியிருக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி.

இதில், கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், ரோஜாவுக்கு ஜெகன்மோகன் கொடுத்த வாய்ப்பில், சிறிதளவே கொடுத்தார் சந்திரபாபு நாயுடு. அவரின் எச்சரிக்கை அந்தளவிற்கு கூர்மையாக இருந்தது.

இனிவரும் நாட்களில் ரோஜா மற்றும் அவரது ஆதரவாளர்களின் செயல்பாடுகள் எப்படியிருக்கின்றன மற்றும் கட்சிக்குள் எழும் சலசலப்புகள் ஆகியவற்றைப் பொறுத்தே, ஜெகன்மோகனின் நடவடிக்கைகள் அமைவதற்கான வாய்ப்புகளே அதிகம். எனவே, அதுவரை பொறுத்திருந்து கவனிப்பதே தற்போது நம்முன் இருக்கும் ஒரே வாய்ப்பு..!

– மதுரை மாயாண்டி