மொகாலி:

மொகாலியில் இன்று நடைபெற்று வரும்  இன்றைய ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்,  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 151 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 22வது லீக் ஆட்டம், இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே  மொகாலியில் நடைபெற்று வருகிறது.

இன்றைய போட்டியில்  டாஸ் வென்று பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் மட்டையுடன் களமிறங்ககியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக   டேவிட் வார்னர், பேர்ஸ்டோவ் ஆகியோர் களம் இறங்கினர்.

இன்றைய சன் ரைசர்ஸ் ஆட்டம் தூள் கிளப்பும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கும் வகையில்,  பேர்ஸ்டோவ் 1 ரன் எடுத்த நிலையில் முஜீப் உர் ரஹ்மான் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் காரணமாக ரசிகர்கள் சோர்வடைந்தனர்.

அதைத்தொடர்ந்து விஜய் சங்கர் களமிறங்கினார். இதன் காரணமாக ஆட்டக்களம் சூடுபிடிக்கும் என எதிர்பார்த்த நிலையில், பஞ்சாப் அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாற்றத்துடனேயே விளையாடினர். அணியின் ஸ்கோர் 56 ரன்னாக இருந்தபோது,  விஜய் சங்கர் 27 பந்தில் 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய முகமது   நபி 12 ரன்னில் வெளியேற,  4-வது விக்கெட்டுக்கு வார்னர் உடன் மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார்.  ஐதராபாத் 15.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. வார்னர் 49 பந்தில் அரைசதம் அடித்தார். இறுதி ஓவர்களில் ஐதராபாத் அதிரடி ஆட்டத்தை ஆட, 18-வது ஓவரில் 8 ரன்களும், 19-வது ஓவரில் 10 ரன்களும், கடைசி ஓவரில் 15 ரன்களும் அடித்தது  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி.  குறிப்பிட்ட   20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்துள்ளது.

இதையடுத்து பஞ்சாப் அணிக்கு  151 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.