மும்பை:

மகாராஷ்ட்டிர மாநிலத்தில் கடன் பிரச்சினையால் பாஜகவை சேர்ந்த விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.


உன் அம்மாவிடம் ரூ.150 கொடுத்துள்ளேன். அதில் 2 ஜோடி பேன்ட் வாங்கிக் கொள். பயிருக்கு போதிய விலை கிடைக்கவில்லை. ஆட்சியாளர்கள் எங்களுக்கு உதவவில்லை. 2 மகள்கள் திருமணத்துக்கு வாங்கிய கடனை கட்ட முடியவில்லை.

பாஜக அரசு விவசாயிகளுக்கு எதுவுமே செய்யவில்லை. எங்கள் கிராமத்தில் 90 சதவீதம் பேர் பாஜக ஆதரவாளர்கள்தான். அதனால் ஒரு பயனும் கிடைக்கவில்லை.

காங்கிரஸ் அரசு எவ்வளவோ பரவாயில்லை. விவசாயிகளை அவர்கள் அரவணைத்துச் சென்றனர். என்னால் இந்த உலகில் வாழ முடியவில்லை.

& கடந்த மார்ச் 26-ம் தேதி தனஞ்செய் நவதே என்ற விவசாயி எழுதிய கடைசி கடிதம்தான் இது.

2 நாட்கள் கழித்து இவரது உடல் 7 அடி பள்ளத்திலிருந்து மீட்கப்பட்டது. அவரது சட்டைப் பையிலிருந்து இரண்டு 10 ரூபாய் நோட்டுகளும், கடிதமும் இருந்தன.
விதர்பா பகுதியில் கடந்த தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பணியாற்றியவர்தான் நவதே. கிராமப்புறங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்பதற்கு நவதே ஒரு சாட்சி.

கிராமப் புறங்களில் விவசாயம் பொய்த்துப் போனதால், குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் வேலைக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். வறுமை வாட்டி வதைக்கிறது.

லஞ்சம் வாங்கும் உள்ளூர் அரசு அதிகாரிகள், ஏமாற்றிய மழை ஆகியவை விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளிக் கொண்டிருக்கிறது.
கிராமப் புறங்கள் வளர்ந்ததாக அரசால் சொல்லப்படுகிறது.

அதேசமயம், வாழ்க்கையை நகர்த்துவதற்கே விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.