கொல்கத்தா:

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தேர்தல் பிரசாரங்கள் நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகின்றன. கொல்கத்தாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பொய்களாக கூறி வரும் பிரதமர் மோடியின் வாய்க்கு சீல் வைக்க வேண்டும் என்று கூறினார்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதையடுத்து,  மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் காரணமாக நாடு முழுவதும் அனல் பறக்கும் பிரசாரங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் திரிணாமுல்  கட்சியின் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி மாநிலத்தில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

இன்று நக்ரக்கட்டா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மம்தா பிரதமர் மோடியை கடுமையான சாடினார்.   பிரதமர் மோடி தனது 5 ஆண்டு பதவிக்காலத்தில் நான்கரை ஆண்டு காலத்தை வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்றே கழித்துவிட்டார் என்று குற்றம் சாட்டியவர்,  விவசாயிகள், ஏழை, நடுத்தர மக்களின் பிரச்சனைகளை கவனிக்க அவருக்கு நேரம் இருந்தது இல்லை என்றார்.

பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்தும் அரசியலில் இருந்தும் தூக்கி வீசுங்கள் என்று பேசியவர், தற்போது  தேர்தல் நெருங்குவதால் அவர்கள் உங்கள் வீட்டின் கதவை ஓட்டுக்காக தட்டுகிறார் என்றும், வாய்க்கு வந்த பொய்களை எல்லாம் உளறிக்கொண்டிருக்கிறார் என்றும் கூறினார்.

மோடி,  ஆட்சி, அதிகாரத்தை தவறான பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மிரட்டி வருவதாக பேசிய மம்தா,  பொய் பேசுவதற்கு ஒரு போட்டி வைத்தால் மோடிக்குதான் முதல் பரிசு கிடைக்கும் என்று கூறியவர்,  இந்த தேர்தலிலும் பொய் பேசாதவாறு அவரது உதடுகளை ஒட்டி  வாய்க்கு சீல் வைக்க வேண்டும் என்று கூறினார்.

மோடி குறித்து மம்தாவின் கடுமையான விமர்சனம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.