சென்னை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்,  பெண் பயணிகள் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில்  புதிய திட்டத்தை அறிவித்து உள்ளது. அதன்படி, பெண்களுக்கான புதிய உதவி எண் (helpline) அறிமுகப்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் மார்ச் 8ந்தேதி சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம்  பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பிரத்யேக மகளிர் உதவி எண் 155370-ஐ அறிமுகப்படுத்தி இருக்கிறது.

மகளிர் உதவி எண் 155370 முழுக்க முழுக்க பெண்களால் 24/7 முறையில் இயக்கப்படும் சேவையாகும். மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் போது ஏதேனும் இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பெண் பயணிகளுக்கு உடனடி உதவி மற்றும் ஆதரவை வழங்குவதற்காக இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த உதவி எண் பல சேவைகளை வழங்குகிறது, இதில் அவசரகால பதில், தேவைப்படும் போதெல்லாம் பெண்களுக்கு சரியான நேரத்தில் உதவி கிடைப்பதை உறுதி செய்கிறது. தற்போது, இந்த உதவி எண் BSNL நெட்வொர்க்கில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நெட்வொர்க்குகளுடன் செயல்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில்,  பெண்களின் பாதுகாப்பிற்காக தற்காப்புக் கலைகள் மற்றும் சுய பாதுகாப்பு நுட்பங்களில் பயிற்சி பெற்ற பின்க் ஸ்குவாட் என்ற பெண் பாதுகாப்பு பணியாளர்கள் குழு மெட்ரோ ரெயில் நிலையங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன்,  மேலும், நடைமேடையில் மிகவும் வெளிச்சத்துடன் கூடிய மகளிருக்கென தனியான காத்திருப்பு பகுதி, மகளிருக்கென ஒதுக்கப்பட்ட பெட்டிகளுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.