தஞ்சாவூர்: அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்த பிளஸ்2 மாணவி,  வார்டன் மதம்மாற வலியுறுத்தியதால் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மதம் மாற கட்டாயப்படுத்தியதால் என் மகள் தற்கொலை செய்துகொண்டார் என தற்கொலை செய்துகொண்ட  அரியலூர் மாணவியின் தந்தை காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

அதில், என் மகள் விஷம் குடித்த விஷயமே எனக்கு தாமதமாகத்தான் தெரிந்தது. விஷம் குடித்தது ஏன்? என்று மகளிடம் கேட்டபோது எங்கள் பள்ளிக்கூடத்தில் என்னை மதம் மாறுமாறு கட்டாயப்படுத்தினார்கள். நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். அதனால் என்னை கொடுமைப்படுத்தினார்கள். அந்த கொடுமை தாங்க முடியா மல் நான் விஷம் குடித்துவிட்டேன் என்று தெரிவித்தாக கூறியுள்ளார்.

மேலும், எனது மகளை மதம் மாற சொல்லி கட்டாயப்படுத்தி கொடுமைப்படுத்தி அவளது மரணத்திற்கு காரணமாக இருந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனக்கு நீதி வழங்க வேண்டும் என்று மாணவியின் தந்தை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்து போராட்டம் நடத்தி வருகிறது. பள்ளிக்கு சீல் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருவதுடன் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் தமிழகஅரசை வலியுறுத்தி வருகிறது.

ஆனால்,  போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, மாணவி மதமாற்றத்தில் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று கூறியுள்ளார். போலீசார் நடத்திய விசாரணையிலும், மாணவி மாஜிஸ்திரேட்டிடம் அளித்த வாக்குமூலத்திலும் மதமாற்றம் தொடர்பாக எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை. அதுபோல அவரது பெற்றோரும் சொல்லவில்லை. அதனால் முதல் தகவல் அறிக்கையில் மதமாற்றம் குறித்து குறிப்பிடப்படவில்லை.

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையில், மதமாற்றம் வலியுறுத்தியது தொடர்பாக மாணவி சிகிச்சையின்போது பேசிய வீடியோ வைரலாகி வருவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  தற்போது லாவண்யாவின் பெற்றோர் அளித்த  மதமாற்றம் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மத மாற்றம் வற்புறுத்தலால் தஞ்சையில் பள்ளி மாணவி தற்கொலை செய்யவில்லையாம்! மாவட்ட எஸ்.பி. தகவல்