சென்னை: சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்களின் விடுப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள CLAPP விடுப்பு செயலியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து,  விடுப்பு செயலி பதிவிறக்கம் செய்யப்பட்ட கைபேசியை காவலர்களுக்கு வழங்கினார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,  சென்னை பெருநகர காவல்துறையால் உருவாக்கப்பட்ட விடுப்பு செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் பங்கேற்றனர்.

CLAPP விடுப்பு செயலியை பயன்படுத்தி காவல் துறையினர் அவர்களது தொலைபேசி மூலமாகவே ,  அவர்களுக்கு தேவைப்படும் விடுப்புகள் குறித்து கோரிக்கை வைக்கலாம். மேலும், அவர்கள்  ஏற்கனவே  எடுத்திருக்கும் விடுப்புகளை பதிவு செய்வதற்கும் இந்த செயலி பயன்படும்.

தற்போது வரை விடுமுறை தேவைப்படும் காவலர்கள்,  நேரடியாக காவல் நிலையத்திற்கு வந்து அதற்கு குறித்த விடுப்பு விண்ணப்பம் எழுதி தான் விடுப்பு எடுக்க வேண்டிய சூழல் இருந்தது. ஆனால், இனிமேல் CLAPP செயலி மூலம் அவர்கள்  இருக்கும் இடத்தில் இருந்தே விடுப்பு எடுக்க முடியும்.

இந்த செயலி மூலம் காவல் துறையினர் அவர்களுக்கான சாதாரன விடுமுறை மற்றும் மருத்துவ சேவை தொடர்பான விடுப்பு நேரடியாக இந்த செயலியில் பதிவு செய்யலாம். விடுப்பு பதிவு செய்த பின் அதற்கான பதிலை அதிகாரிகள் அதில் பதிவிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.