புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவலிலிருந்து பாதுகாக்கும் வகையில், நாள்தோறும் 1000 பாதுகாப்புக் கருவிகளை உற்பத்தி செய்ய இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 150ஐ நோக்கி அதிகரித்துக் கொண்டுள்ளது.

இந்நிலையில், இந்திய ரயில்வேயின் கவனம், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக திரும்பியுள்ளது.

இதுகுறித்து இந்திய ரயில்வே சார்பில் கூறப்பட்டிருப்பதாவது; நாடு முழுவதுமுள்ள ரயில்வேப் பணிமனைகளில், சுமார் 17 பணிமனைகள் மூலம் பாதுகாப்புக் கருவிகளை உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

உற்பத்தி செய்யப்படும் பாதுகாப்புக் கருவிகளை நாடு முழுவதுமுள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் வழங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் 50% அளவிற்கான தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.