இந்தூர்: கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படாததால், ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச முதல்வரான சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது, “கொரோனா வைரஸைக் கட்டுக்குள் வைக்க வேண்டுமெனில் சமூக இடைவெளியை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் உட்பட பல மாநிலத்தின் முதல்வர்களும் வலியுறுத்தினர்.

இதற்கான நேரடி நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. வணிக நிறுவனங்கள் , வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா தலங்கள் என்று அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு மட்டும் மக்கள் வெளியில் வந்தால் போதுமானது.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் இறுதிவரை விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. மக்களின் உயிர் விலை மதிப்பற்றது. பணம் போனால் சம்பாதிக்க முடியும்.

பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் மீண்டும் மீட்டெடுக்கலாம். உயிர் இருந்தால்தான் அதை செய்ய முடியும்; உயிர் போனால் மீண்டும் வராது. எனவே ஊரடங்கை நீட்டிக்க வேண்டும். எனினும் அப்போதைய நிலைமையைக் கவனத்தில் கொண்டு முடிவெடுத்தல் அவசியம். இதற்கு மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தருவதும் அவசியம்” என்றார் சவுகான்.