வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடையை தகர்த்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனை கொல்ல முயற்சித்ததாக 19 வயது இந்திய இளைஞர் அமெரிக்காவில் இன்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் மிஸ்ஸோரி மாகாணத்தின் செயின்ட் லூயிஸ் புறநகர் பகுதியான செஸ்டர்ஃபீல்டை இருப்பிடமாகக் கொண்ட சாய் வர்ஷித் கந்துலா என்ற நபரைக் கைது செய்துள்ள அமெரிக்க போலீசார் அவர் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

கண்டெய்னர் லாரி போன்ற டிரக் ஒன்றை வாடகைக்கு எடுத்த சாய் வர்ஷித் கந்துலா வெள்ளை மாளிகைக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்பு மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார்.

பின்னர் நாஜி கொடியுடன் லாரியில் இருந்து இறங்கிய கந்துலா அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை நோக்கி சத்தமிட்டதுடன், தான் ஆட்சியைக் கைப்பற்றப்போவதாகவும் அதிபர் ஜோ பைடனை கொல்ல இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து அவனை சுற்றுவளைத்துப் பிடித்த போலீசார் அவனிடம் எந்த ஆயுதமும் இல்லை என்பதை உறுதிசெய்தனர் மேலும் அவன் கொண்டு வந்த வாகனத்திலும் எந்த விதமான வெடிபொருளும் இல்லை என்பதை உறுதி செய்தனர்.

அவனை கைது செய்த போலீசார் அவனது மனநிலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன் கந்துலா மீது அதிபரை கொல்ல முயற்சித்தது, வெள்ளை மாளிகையை தகர்க்க முயற்சித்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.