சிங்கப்பூர்

சிங்கப்பூரின் வர்த்தகத் துறை அமைச்சர் எஸ் ஈஸ்வரனைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்துப் பேசி உள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று இவ்விரு நாடுகளுடனான தமிழகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதற்காக முதல்வர் சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

சிங்கப்பூரில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், Temasek, Sembcorp, CapitaLand ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களைச் சந்தித்துப் பேசி தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலையை எடுத்துக்கூறி, தமிழகத்தில் தொழில் முதலீடுகள் செய்திட வேண்டுமென்று கோரிக்கை விடுத்து, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.

 

இதனை தொடர்ந்து, சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரனை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, இரு நாடுகளுக்கிடையே உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது பற்றியும், புதிய தொழில் முதலீடுகளைத் தமிழகத்தில் மேற்கொள்வது குறித்தும் உரையாடியதோடு, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.