டில்லி

த்மாவத் இந்தித் திரைப்படம் வெளியாவதை ஒட்டி நேற்று வட இந்தியா எங்கும் வன்முறை வெடித்துள்ளது.

சித்தூர் அரசி பத்மாவதியின் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தித் திரைப்படம் “பத்மாவத்”.    பத்மாவத் திரைப்படத்தில் அரசி பத்மாவதி குறித்தும்,  ராஜபுத்திரர் பற்றியும் சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.   பல மாநில அரசுகள் இந்தத் திரைப்படத்துக்கு தடை விதித்தன.    உச்ச நீதிமன்றம் அந்தத் தடையை ரத்து செய்துள்ளது.

இந்நிலையில் நேற்று வட இந்தியாவில் பல இடங்களில் கடும் போராட்டம் நடந்துள்ளது.   குஜராத், மத்தியப் பிரதேசம்,  டில்லி மற்றும் சுற்றுப் புறங்களில்  வாகனங்களுக்கு தீ வைப்பு,  தியேட்டர்களை அடித்து நொறுக்குதல் போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.   குர்கான் பகுதியில் ஒரு பள்ளிப் பேருந்து அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த திரைப்படத்தை காண வரும் ரசிகர்களின் பாதுகாப்பு கேள்விக்குரியானதால்  இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு காணும் வரை இந்தப் படத்தை திரையிடப் போவதில்லை என குஜராத் மாநில திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

வட இந்தியா முழுவதும் வன்முறை நடைபெறுவதாக செய்திகள் வந்துக் கொண்டு இருக்கின்றன.   இதனால் ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், கோவா உள்ளிட்ட மாநிலங்களின் உள்ள இந்திய மல்டிபிளக்ஸ் சங்கத்தினரும் தீர்வு வரும் வரை இந்த படத்தை திரையிட மாட்டோம் என அறிவிப்பு விடுத்துள்ளனர்.    நாட்டில் உள்ள திரையரங்குகளில் 75% இந்த சங்க உறுப்பினர்களிடம் உள்ளது.