டெல்லி: இந்தியா சரியான பதிலடி தராவிட்டால் சீனா தமது அத்துமீறலை நிறுத்தாது என்று ராகுல்காந்தி கூறி உள்ளார்.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா, சீனா ராணுவம் இடையே 10 மாதங்களாக கடுமையான மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்தியாவுக்கு சொந்தமான அருணாசல பிரதேச மாநிலத்தை தனது ஆளுகைக்கு உள்பட்ட திபெத்தின் ஒரு பகுதி என்றும் சீனா தொடா்ந்து கூறி வருகிறது.

அருணாசல பிரதேச எல்லைக்குள் சீன ராணுவத்தினா் புகுந்து தளங்களை அமைத்து வருவதாக செய்திகள் வெளியாகின. அவற்றை மத்திய அரசு தொடா்ந்து மறுத்து வந்த நிலையில், அருணாசலப்பிரதேசத்தில் பல வீடுகள் அடங்கிய புதிய கிராமத்தை சீனா உருவாக்கியுள்ளதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகின.

இந் நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா சரியான பதிலடி தராவிட்டால் சீனா தமது அத்துமீறலை நிறுத்தாது என்று தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

இந்தியா பலவீனமாகி உள்ளது என்பதை சீனா பார்த்து கொண்டிருக்கிறது. உலக வரைப்படத்தை மாற்ற சீனா விரும்புகிறது. ஆனால் இந்தியாவுக்கோ உலகளாவிய பார்வை இல்லை. இந்த விவகாரத்தில் இந்தியாவை சீனா பல முறை சோதித்து பார்த்துள்ளது. சீனாவுக்கு உரிய பதிலடி தராவிட்டால் அதன் அத்துமீறல்கள் தொடரும் என்று கூறி உள்ளார்.