அகமதாபாத்: கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பழைய 500, 1000 நோட்டுக்களை அரசு செல்லாது என்று அறிவித்ததால் நாடே ஒரு பக்கம் பொருளாதார குழப்பத்தில் ஆழ்ந்திருக்க ரூ2.5 லஞ்சம் பெற்ற துறைமுக அதிகாரிகள் இருவரை லஞ்ச ஒழிப்பு துறை கண்ணி வைத்து பிடித்திருக்கிறது.

bribe_2000

இது நம் நாட்டில் சர்வ சாதாரணமாக நடைபெறும் நிகழ்வுதானே என எண்ணத் தோன்றும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இவர்கள் பெற்ற 2.9 லட்சம் லஞ்சப் பணமும் புத்தம் புது 2000 ரூபாய் நோட்டுக்களாகும். புது 2000 ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது நவம்பர் 11-ஆம் தேதி, ஒரு வங்கிக் கணக்கில் இருந்து ஒருவர் ஒரு வாரத்தில் எடுக்க அனுமதிக்கப்பட்ட அளவு ரூ.24,000 மட்டுமே. அப்படியிருக்க 2.9 லட்சம் மதிப்பிலான புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் எங்கிருந்து கிடைத்திருக்கும் என்பது மர்மமாக உள்ளது..
குஜராத்தின் கண்ட்லா துறைமுகத்தில் பணிபுரிந்து வரும் அதிகாரிகளான பி.ஶ்ரீனிவாசு மற்றும் கே.கம்ட்டேகர் ஆகியோர் ஒரு நிலுவையான பணப் பிரச்சனை ஒன்றை தீர்த்து வைக்க ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து ரூ 4.4 லட்சம் பெற்றிருந்திருக்கின்றனர். இதில் நவ.15-ஆம் தேதியன்று இந்த சட்டவிரோத நடவடிக்கையில் இடைத்தரகராக செயல்பட்ட ஒரு நபருக்கு 2.5 லட்சத்தை அதில் பங்காக கொடுத்திருக்கின்றனர். இவர்களை கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு துறை இடைத்தரகரையும் கைது செய்திருக்கிறது.
இதில் துறைமுக அதிகாரியான பி ஶ்ரீனிவாசுவின் வீட்டில் ரூ.40,000 பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. தான் லஞ்சம் வாங்கியதாக அவர் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்திருகிறார். இவருக்கு ரூ.2.9 லட்சம் மதிப்பிலான புது 2000 ரூபாய் நோட்டுக்கள் எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.