சமீபத்தில் தாம் மேற்கொண்ட கறுப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கையால் கோபமடைந்த சிலர் தன்னை மிரட்டியதாகவும், அவர்கள் தன்னை உயிரோடு வாழவிடமாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் 70 ஆண்டுகள் சேர்த்து வைத்த சொத்துக்களுக்கு தன்னால் ஆபத்து வந்திருக்கிறது, ஆனால் தான் எந்த இன்னலையும் சந்திக்க தயார் என்று பிரதமர் மோடி கோவாவில் நடந்த ஒரு கூட்டத்தில் கூறியிருந்தார்.

modi_audio

இன்று மாநிலங்களவையில் நடைபெற்ற ரூபாய் நோட்டு தடை குறித்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா மோடியின் கோவா பேச்சு குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது அவர் பேசியதாவது, “உங்களை மிரட்டியது யார்? உங்களை கொலை செய்ய சிலர் முயல்வதாக கூறினீர்களே அவர்கள் யார்? அதை சபையில், மக்கள் மன்றத்தில் அறிவியுங்கள், எங்கள் பிரதமர் நெடுநாட்கள் நலமுடன் வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனவே தயவு செய்து உங்களிடம் உள்ள தகவல்களை தெரிவியுங்கள்” என்று அவர் பேசினார்.
இன்று தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் ரூபாய் நோட்டு தடை குறித்த விவாதத்தில் அனல் பறந்தது. எதிர்கட்சிகள் இந்த நடவடிக்கையை “அவசரமான-போதுமான முன்னேற்பாடற்ற நடவடிக்கை” என்று விமர்ச்சித்தன. இது நாட்டில் மோசமான பொருளாதார குழப்பத்தை உண்டுபண்ணியிருக்கிறது. அதுமட்டுமல்ல இந்த விஷயம் ஏற்கனவே சில பாஜகவினருக்கு இரகசியமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது இதுவரை நடந்த ஊழல்களிலேயே மிக மோசமான ஊழல் என்று காங்கிரஸ் விமர்ச்சித்துள்ளது.