பாட்டாளி மக்கள் கட்சி , தமிழக அரசிற்கான 2017- 2018 ஆம் ஆண்டின்

பொது நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்:

 

வரவு- செலவு

1.     2017-18 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின்  வருவாய் வரவுகள் ரூ.3,29,712 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டில் மொத்த வருவாயை விட ரூ.1,25,908 கோடி அதிகமாகஇருக்கும். கனிம வளங்களை சிறப்பான முறையில் கையாளுவதன் மூலமும், வணிக வரி வசூலை மேம்படுத்துவதன் மூலமும் ரூ.1,05,000 கோடி கூடுதல் வருவாய் ஈட்ட திட்டம்வகுத்திருப்பதன் மூலமும் தான் இந்த அளவுக்கு அதிக வருவாய் சாத்தியமாகிறது.

2.    நடப்பாண்டின் மொத்த செலவினம் ரூ.3,34,433 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.2,93,186 கோடியாகவும் இருக்கும். வருவாய் செலவினத்தில் ரூ.45,000 கோடிநிலுவையில் உள்ள கடனை அடைப்பதற்காக அசலாக செலுத்தப்படும். இதன்படி, அடுத்த 5 ஆண்டுகளில் தமிழக அரசின் தற்போதைய கடன் அடைக்கப்படும். வளர்ச்சித்திட்டங்களுக்காக புதிதாக வாங்கப்படும் கடன் மிகமிக குறைந்த அளவிலேயே இருக்கும்படி பார்த்துக்கொள்ளப்படும்.

3.    2017-18 ஆம் ஆண்டில் தமிழக அரசின் வருவாய்க் கணக்கில் ரூ.36,526 கோடி உபரியாக இருக்கும். நிதிப்பற்றாக்குறை ரூ.4,721 கோடி என்ற அளவில் மிகமிகக் குறைவாகஇருக்கும். வருவாய்க் கணக்கில் உபரியாக இருக்கும் தொகை மூலதன செலவுகளுக்காக செலவிடப்படும் என்பதால் நிதிப்பற்றாக்குறை பெருமளவில் குறைந்திருக்கிறது.

நிர்வாக சீர்திருத்த ஆணையம்

4.    தமிழக அரசு நிர்வாகக் கட்டமைப்பை நிகழ்காலச் சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிஒருவர் தலைமையில் நிர்வாக சீர்திருத்த ஆணையம் அமைக்கப்படும்.

5.    தமிழக அரசின் வருவாய் வளர்ச்சி கடந்த 5 ஆண்டுகளில் பெருமளவில் குறைந்திருக்கிறது. 2013-14 முதல் 2017-18 வரையிலான ஐந்தாண்டுகளில் தமிழக அரசின் சொந்தவரிவருவாய் எதிர்பார்க்கப்பட்டதைவிட, 67,000 கோடி ரூபாய் அளவுக்கு குறைந்திருக்கிறது.

6.    மது விற்பனை மூலம் கிடைக்கும் ஆயத்தீர்வை வருவாயைத் தவிர பிற வருவாய் இனங்கள் எதிலும் கடந்த 5 ஆண்டுகளில் இலக்கை எட்ட முடியவில்லை.

அரசின் வருவாயை அதிகரிக்கக் குழு

7.    தமிழக அரசின் வரி வசூல் கட்டமைப்பில் நிலவும் குளறுபடிகள், ஊழல்கள் ஆகியவற்றை கலைந்து அரசின் வருவாயை அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை வழங்க பணியில் உள்ளஇ.ஆ.ப. அதிகாரி ஒருவர் தலைமையில் குழு அமைக்கப்படும்.

அம்மா பெயர் நீக்கம்

8.    தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சரின் பெயரைக் குறிக்கும் வகையில் நடைமுறையில் உள்ள அம்மா திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு அரசுத் திட்டங்களாகசெயல்படுத்தப்படும்.

9.    இனி வரும் காலங்களில் அறிவிக்கப்படும் எந்தத் திட்டமும் தனி மனிதர்களின் பெயரால் அழைக்கப்படாது. அரசுத் திட்டங்கள் என்றே அழைக்கப்படும்.

10.    தமிழ்நாட்டில் தேர்தல் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு முடிவுகட்டுவதற்கு வசதியாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் செய்யும்படி மத்திய அரசையும், இந்தியதேர்தல் ஆணையத்தையும் நேரில் சந்தித்து வலியுறுத்த முதலமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்படும்.

 

உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள்

 

11.    மே மாதம் 2வது வாரத்தில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த வசதியாக ஏப்ரல் முதல் வாரத்திற்குள் தொகுதி மறுவரையரை செய்யும் பணிகள் முடிக்கப்படும். இப்பணிகளுக்காகரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

12.    மத்திய அரசு அறிவிக்காவிட்டாலும், 13வது ஐந்தாண்டு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தும். இத்திட்ட காலத்திற்கான திட்டமதிப்பு ரூ.3.42 லட்சம் கோடியாக இருக்கும். 2017-18ஆம் ஆண்டிற்கான திட்டஒதுக்கீடு ரூ.61,000 கோடியாக இருக்கும்.

13.    தமிழ்நாட்டில் பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று படித்து வேலையில்லாமல் தவிக்கும் மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். தமிழக மாணவர்களுக்குரூ.18,000 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் வாராக்கடனின் அளவு ரூ.2,000 கோடி ஆகும். இந்தக் கடன் உடனடியாக தள்ளுபடி செய்யப்படுகிறது. இதற்கானதொகையை பொதுத்துறை வங்கிகளுக்கு தமிழக அரசே செலுத்தும்.

நீட் தேர்வு ரத்து

14.    கல்விக் கடன் பெற்று உயர் கல்வி கற்ற மாணவர்களில் வேலைகிடைக்காதவர்களின் விவரத்தைத் திரட்ட கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அவர்களின் கடன்களையும் அரசேசெலுத்தும். இந்த பணிகள் நடப்பாண்டின் இறுதிக்குள் நிறைவடையும்.

15.    தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்திருத்தத்திற்கு இம்மாதஇறுதிக்குள் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்படும்.

16.    தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் உள்ள இடங்கள் ஆகியவற்றுக்கு நீட் தேர்வு பொருந்தும். நீட் தேர்வுமதிப்பெண் அடிப்படையில் ஒற்றைச்சாளர முறைப்படி இந்த இடங்களுக்கான கலந்தாய்வை தமிழக அரசே நடத்தும்.

அண்ணாமலை பல்கலைக்கு ரூ.1000 கோடி

17.    கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கித்தவிக்கும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு உதவும் வகையில் ஒருமுறை நிதி உதவியாக ரூ.1,000 கோடிவழங்கப்படுகிறது.

18.    அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அனுமதிக்கப்பட்ட பணியாளர்கள் எண்ணிக்கை 5456 ஆக உயர்த்தப்படும். இதன் மூலம் அண்ணாமலை பல்கலைக் கழக நிதிநெருக்கடிக்கும்,கூடுதல் பணியாளர்கள் வேறு கல்வி நிறுவனங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவதற்கும் முடிவுகட்டப்படும்.

மின் கட்டணம் குறைப்பு

19.    தமிழ்நாட்டில் மின் கட்டணம் 10% குறைக்கப்படும். இரு மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் செலுத்தும் முறை மாற்றப்பட்டு, மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும்முறை அறிமுகம் செய்யப்படும். இதனால் மின்கட்டணம் மேலும் 25% குறையும்.

பேருந்துக்கட்டணம் குறைப்பு

20.    தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு குறைக்கப்பட்ட கட்டணமே இந்த ஆண்டும் நீடிக்கும். அடுத்த 3 ஆண்டுகளுக்கு பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்படாது.

21.    சென்னையில் மாநகரப் பேருந்துகளின் எண்ணிக்கை 2017-18 ஆம் ஆண்டில் 5,000ஆக உயர்த்தப்படும். சென்னை மாநகரப் பேருந்துகளில், ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணமில்லாப்பயணத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அன்று முதல் மாநகரப் பேருந்துகளில் அனைவரும் இலவசமாக பயணம் செய்யலாம் என்று தமிழக அரசு மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.

22.    மத்திய அரசுடன் பேசி தணிக்கை செய்வதன் மூலம் தமிழகத்தில் நெடுஞ்சாலைகளுக்கான சுங்கக்கட்டணங்கள் முறைப்படுத்தப்படும். முதலீடு ஈட்டப்பட்ட சுங்கச் சாவடிகளில்40% மட்டுமே பராமரிப்புக் கட்டணமாக வசூலிக்கப்படும்.

பள்ளிக் கல்விக்கு ரூ.50,000 கோடி

23.    தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ-க்கு இணையான பாடத்திட்டம் 2018-19 ஆம் கல்வி ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும். இப்பாடத்திட்டத்தை தயாரிக்க கல்வியாளர்கள் குழுஅமைக்கப்படும்.

24.    தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு குறைந்தபட்சம்  10 பள்ளிகள் வீதம் தமிழகம் முழுவதும் 500 பள்ளிகள் மாதிரிப் பள்ளிகளாக மாற்றப்படும்.  இந்தப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்புமுதல் 12ம் வகுப்பு வரை இருக்கும்.

25.    தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்படும். ஒவ்வொரு மாணவருக்கும் கல்வி வழங்கஆண்டுக்கு ரூ.30,000 செலவிடப்படும்.

26.    பள்ளிக் கல்வித் துறைக்கு நடப்பாண்டில் ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

27.    தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள வசதியாக 9ஆம் வகுப்பிலிருந்தே சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

திறன்சார் கல்வி

28.    பள்ளிகளில் திறன் சார் கல்வி (Skill Based Education), அறிவுசார் கல்விமுறை (Knowledge Based Education), தொழில்கல்வி (Vocational Education) ஆகிய கல்வி முறைகள்அறிமுகப்படுத்தப்படும். அதன்படி 11-ஆம் ஆண்டில் வழக்கமான பாடங்களுடன் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிப்பதற்கான பயிற்சிப் பாடம் கூடுதலாகச் சேர்க்கப்படும். அதுமாணவர்கள் படிக்கும் விருப்பப்பாடம் சார்ந்ததாக இருக்கும்.

29.    மாணவர்கள் பள்ளிகளுக்கு எளிதாகச் சென்றுவர வசதியாக, “மாணவர்கள் மட்டும்” பேருந்துகள் இயக்கப்படும்.

30.    அனைத்து மாவட்டங்களிலும் முறையே ஒரு மருத்துவக் கல்லூரியும், ஒரு பொறியியல் கல்லூரியும் அமைக்கப்படுவது உறுதி செய்யப்படும். அந்த வகையில், அடுத்த ஆண்டில்புதுக்கோட்டை, விருதுநகர், பெரம்பலூர், திண்டுக்கல், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.

31.    நாகப்பட்டினம், அரியலூர் மாவட்டங்களில் 2018-19 ஆம் ஆண்டில் அரசுப் பொறியியல் கல்லூரிகள் அமைக்கப்படும்.

32.    தமிழ்நாட்டில் உள்ள மத்திய கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் 50 விழுக்காடு இடங்களை மாநில ஒதுக்கீடாக வழங்கவேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசுவலியுறுத்தும்.

33.    2017 -2018 ஆம் ஆண்டில் உயர்கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.13,100 கோடியாக அதிகரிக்கப்படுகிறது.

புதிய கல்வி நிறுவனங்கள்

34.    சென்னைப் பல்கலைக் கழகமும், அண்ணா பல்கலைக் கழகமும் திறன்சார் அறிவு மையங்களாக (Centre of  Excellence) தரம் உயர்த்தப்படும்.

35.    தமிழகத்தில் 6 ஒருமைப் பல்கலைக்கழகங்கள் (Unitary Universities) அமைக்கப்படும். ஆராய்ச்சிகளைச் செய்வது மட்டுமே இவற்றின் முதன்மை நோக்கமாக இருக்கும்.

36.    சென்னையில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (Indian Institute of Science Education and Research – IISER) அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்தியஅரசிடம் வலியுறுத்தி, ஓராண்டிற்குள் இந்த உயர் கல்வி நிறுவனம் தொடங்கப்படும்.

37.    தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திலும் ஐ.ஐ.டி.க்கு இணையான ஓர் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்(Tamilnadu Institute of Technology – TIT) அமைக்கப்படும்.

38.    ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு சட்டக்கல்லூரியும், ஒரு வேளாண் கல்லூரியும் அமைக்கப்படும்.

39.    அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும். முதல்கட்டமாக 2018-19ஆம் ஆண்டில் 10 மாவட்டங்களில் மகளிர் கல்லூரிகள்தொடங்கப்படும்.

தமிழ்நாடு – ஆந்திரா ஒருங்கிணைந்த தொழில் மண்டலம்

40.    தமிழ்நாட்டில் திருபெரும்புதூர் முதல் கும்மிடிப்பூண்டி வரையிலான பகுதிகள் சிறப்புப் பொருளாதார மண்டலங்களாக உருவெடுத்துள்ளன. இப்பகுதியையொட்டிய ஆந்திரமாநிலத்தின் ஸ்ரீசிட்டியும் சிறப்புப் பொருளாதார மண்டலமாக உருவெடுத்துள்ளது. அதேபோல், வேலூர் மாவட்டத்தையொட்டிய இருமாநில எல்லைகளிலும் புதிய தொழிற்சாலைகள்அமைக்கப்பட்டு வருகின்றன.

41.    தமிழ்நாடு- ஆந்திர மாநில எல்லையில் உள்ள தொழில் பகுதிகளை ஒருங்கிணைந்த தொழில்மண்டலமாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆந்திர அரசுடன்பேச்சு நடத்தி மற்ற விஷயங்கள் முடிவு செய்யப்படும்.

42.    இருமாநில தொழில்பகுதிகளையும் ஒருங்கிணைப்பதன் மூலம் தொழிற்சாலைகளுக்கு தேவையான  கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடியும். இதனால் இரு மாநிலங்களிலும்தொழில் முதலீடு குவியும்.

 

தொழில் வளர்ச்சி

 

43.    தமிழ்நாட்டில் புதிய தொழில் தொடங்குவதற்கான அனுமதி ஒற்றைச்சாளர முறையில் 3 வாரங்களில் வழங்கப்படும். ரூ.100 கோடிக்கும் அதிக மதிப்புள்ள திட்டங்களில்முதலீட்டாளர்களுக்கு உதவ முதலமைச்சர் அலுவலகத்தில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும்.

44.    தொழில் முதலீடு செய்பவர்களை சந்தித்து பேச முதலமைச்சர் வாரம் 3 மணி நேரம் ஒதுக்குவார்.

45.    தொழில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் தமிழகம் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலமும் ஒரு பொருளாதார ஆணையரகமாக செயல்படும்..

46.    ஒவ்வொரு மண்டலத்திலும் தலைமைச் செயலாளர் நிலையிலுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் பொருளாதார ஆணையராக செயல்படுவார்.

ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு

47.    வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலை கேட்டு காத்திருக்கும் 83.33 லட்சம் இளைஞர்களில் சுய தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்களுக்கு ரூ. 5 லட்சம் வரை கடன்வழங்கப்படும். இதற்காக சுயதொழில் முதலீட்டுக் கழகம் என்ற புதிய அமைப்பு தொடங்கப்படும்.

48.    தமிழ்நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலை வழங்கும் நோக்குடன் சிறப்புத்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.

49.    இத்திட்டத்தின்படி தமிழகத்தை சர்வதேச தளவாடக் கிடங்கு மையமாக மாற்றுதல், சுற்றுலா மற்றும் மென்பொருள் சார்ந்த சேவைகளை மேம்படுத்துதல் உள்ளிட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

விவசாயம்

50.    வேளாண்மைக்குத் தேவையான தரமான விதைகள், உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட அனைத்து இடுபொருட்களும் இலவசமாக வழங்கப்படும்.

51.    விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் தடையின்றி பயிர்க்கடன் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். நடப்பாண்டில் ரூ.12,000 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்குநிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

52.    விவசாய வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு டிராக்டர் இலவசமாக வழங்கப்படும். இதை விவசாயிகள் உழவுப் பணிகளுக்காக கட்டணமின்றிபயன்படுத்திக் கொள்ளலாம்.

53.    நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான செலவில் 50 விழுக்காடு மானியமாக வழங்கப்படும்.

 

உழவர்கள் தற்கொலை இல்லா ஆண்டு

 

54.    2017-18 ஆம் ஆண்டை உழவர்கள் தற்கொலை இல்லாத ஆண்டாக மாற்ற வேண்டும் என்பற்காக கீழ்க்கண்ட அம்சங்களைக் கொண்ட சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

*    வேளாண்மைக்குத் தேவையான அனைத்து இடுபொருட்களையும் இலவசமாக வழங்குதல்.

*    வேளாண் விளைப்பொருட்களுக்கு நியாயமான விலை வழங்குதல்.

*    கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்கவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாகப் பெற்றுத் தருதல்.

*    கூட்டுறவு வங்கிகளில் உழவர்கள் வாங்கிய பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில், பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய கடன் சுமையிலிருந்தும் உழவர்களைவிடுவித்தல்.

*    இயற்கைச் சீற்றங்களால் விவசாயம் பாதிக்கப்படும்போது, அதன் பாதிப்பு விவசாயிகளைத் தாக்காத வகையில், பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தி இழப்பீடு வழங்குதல்

ரூ. 5 கோடி இழப்பீடு

55.    இந்த நடவடிக்கைகள் மூலம் விவசாயிகள் தற்கொலைகளை தடுக்க  முடியும் என்பது எங்கள் நம்பிக்கை. இதையும் தாண்டி வேளாண்மை சார்ந்த  பாதிப்புகள் காரணமாகவிவசாயிகள் எவரேனும் தற்கொலை செய்துகொண்டால், அது அரசின் தோல்வியாகக் கருதப்பட்டு, அந்த உழவரின் குடும்பத்திற்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்கப்படும்.

56.    2016-17-ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்த 300-க்கும் கூடுதலான விவசாயிகளின் பட்டியல் மாவட்ட வாரியாகதயாரிக்கப்பட்டு, இம்மாத இறுதிக்குள் அரசிடம் தாக்கல் செய்யப்படும். அதன்பின் அடுத்த மாத இறுதிக்குள் அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் இழப்பீடுவழங்கப்படும்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இழப்பீட்டுத் திட்டம்

57.    வறட்சியால்  உழவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைப் போக்கும் வகையில் நிவாரணத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன் விவரம்வருமாறு:

அ.    வறட்சியால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதம் இழப்பீடு வழங்கப்படும்.

ஆ.    கரும்புக்கு ஏக்கருக்கு ரூ.90,000 வீதமும், நிலக்கடலைக்கு ரூ.25,000 வீதமும் இழப்பீடு வழங்கப்படும்.

இ.    பிற பணப்பயிர்களுக்கு அவற்றின் சந்தை மதிப்புக்கு ஏற்ப ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும்.

ஈ.    நிலமற்ற ஏழைத் தொழிலாளர்கள், நிலம் இருந்தும் வறட்சி காரணமாக சாகுபடி செய்யாத சிறு, குறு விவசாயிகள் ஆகியோருக்கு ஒருமுறை உதவியாக ரூ.25,000 நிதியுதவிவழங்கப்படும்.

ஊ.    வறட்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களின் கூட்டுறவுப் பயிர்க்கடன்கள் எந்த நிபந்தனையும் இன்றி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

 

பொதுத்துறை வங்கிக்கடன் தள்ளுபடி

 

58.    பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களில், மூலதனக் கடன்கள் தவிர ரூ.22,000 கோடி பயிர்க்கடன்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்படும். இந்த தொகையைபொதுத்துறை வங்கிகளுக்கு  வட்டியுடன் சேர்த்து 5 சம தவணைகளில் தமிழக அரசு வழங்கும்.

59.    கூட்டுறவு வங்கிகள் மூலம் நடப்பு ஆண்டில் ரூ.12,000 கோடி கடன் வழங்கப்படும்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி இல்லை

60.    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு நெடுவாசல் மக்களும், உழவர் அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால், இத்திட்டத்திற்கு அனுமதி அளிப்பதில்லை என்று தமிழக அரசுமுடிவு செய்திருக்கிறது. அரசின் இந்த முடிவு, மத்திய அரசுக்கு  தெரிவிக்கப்படும்.

61.    தமிழ்நாட்டில் எண்ணூர் – நாகப்பட்டினம், நாகப்பட்டினம் & மதுரை, நாகப்பட்டினம் – தூத்துக்குடி, திருவள்ளூர் – பெங்களூர் ஆகிய 4 வழித்தடங்களில் 1,175 கிலோமீட்டர்நீளத்திற்கு எரிவாயு குழாய்ப் பாதை அமைக்க இந்தியன் ஆயில் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இத்திட்டத்தால்  விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்பதால் இதற்கு அளிக்கப்பட்டஅனுமதி ரத்து செய்யப்படும்.

62.    இத்திட்டத்தை மாற்றியமைத்து விளைநிலங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் செயல்படுத்த இந்தியன் ஆயில் நிறுவனம் முன்வந்தால், அதற்கு அனுமதி தருவது குறித்து அரசுஆராயும்.

63.    கேரள மாநிலம் கொச்சியிலிருந்து, கர்நாடக மாநிலம் மங்களூருக்கு சேலம், கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்கள் வழியாக எரிவாயுக் குழாய் பாதை அமைக்கும் திட்டமும்வேளாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அத்திட்டத்தின் பாதையையும் மாற்றி அமைக்கும்படி மத்திய அரசை, தமிழக அரசு கேட்டுக்கொள்ளும்.

அத்திக்கடவு -அவினாசி திட்டம்

64.    திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்குப் பயனளிக்கும் அத்திக்கடவு – அவினாசித் திட்டம் ரூ.3523 கோடி செலவில் மாநில அரசின் நிதியில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்குநடப்பாண்டில்  ரூ.1500 கோடி ஒதுக்கப்படும்.

 

காவிரி – அமைச்சர்கள் குழு

 

65.     காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஏப்ரல் மாதம் தீர்ப்பளிக்க உள்ளது. அதன் பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில்மத்திய அரசு  காலதாமதம் செய்தால் அதுகுறித்து மத்திய அரசுடன் பேச்சு நடத்தி வாரியம் அமைக்கப்படுவதை உறுதி செய்வதற்கான சட்ட அமைச்சர் தலைமையில் அமைச்சர்கள்குழு அமைக்கப்படுகிறது.

66.     காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்திருக்கிறது. ரூ.5,912 கோடி செலவில் இத்திட்டத்தைச் செயல்படுத்தகர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இத்திட்டத்தை தடுத்து நிறுத்தும் பணிகளையும் சட்டஅமைச்சர் தலைமையிலான அமைச்சர்கள் குழு மேற்கொள்ளும்.

67.    முல்லைப்பெரியாற்றின் நீர்மட்டத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

 

சீமைக்கருவேல மரங்களை ஒழிக்க சிறப்புச் சட்டம்

 

68.     தமிழ்நாட்டில் வேளாண்மைக்கும் சுற்றுச்சூலுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கும் சீமைக் கருவேல மரங்களை ஒழிப்பதற்காக சிறப்புச் சட்டத்தைநிறைவேற்றும்படி, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை 27.02.2017அன்று ஆணையிட்டிருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து, நடப்பு சட்டப்பேரவைக்கூட்டத்தொடரிலேயே இச்சட்டம் நிறைவேற்றப்படும்.

69.    சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதைவிட, அடியோடு அழிப்பதுதான் நிரந்தர தீர்வு ஆகும். பிரேசில், ஆஸ்திரேலியா, சிரியா ஆகிய நாடுகளில் கருவேல மரங்கள்ஒழிக்கப்பட்டு வருவதால், அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டில் சீமைக் கருவேல மரங்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

70.    யூகலிப்டஸ் தைல மரங்களும், சீமைக் கருவேல மரங்களுக்கு இணையாக நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மை கொண்டவை என்பதால், அவற்றை வளர்க்கத் தடை விதிக்கப்படும்.

ஊழல் ஒழிப்பு

71.     ஊழலை ஒழிப்பதற்காக 12 அம்சத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் அதன் தலைமை அதிகாரி ஊழல் ஒழிப்பு அதிகாரியாக அறிவிக்கப்பட்டு, அவரிடம்ஊழல் ஒழிப்பு பொறுப்பு ஒப்படைக்கப்படும். ஏதேனும் துறையில் ஊழல் நடந்தால் அதற்கு அதன் தலைமை அதிகாரியே பொறுப்பாவார். இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

72.     ஊழலை ஒழிப்பதற்கான இன்னொரு முக்கிய நடவடிக்கையாக தமிழகத்தில் லோக் அயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படும். அதன் முக்கிய அம்சங்களில் சில பின்வருமாறு:

*    லோக் அயுக்தா தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக இருக்கும்.

*    முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் லோக்அயுக்தா வரம்பிற்குள் கொண்டுவரப்படுவர்.

*    ஊழல் வழக்குகள் 6 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்கப்படும்.

*     ஊழல் அதிகாரிக்கு அதிகபட்சமாக ஆயுள்தண்டனை வரை விதிக்கப்படுவதுடன், அவரது ஊழலால்  அரசுக்கு ஏற்பட்ட இழப்பும் அவரிடமிருந்து வசூலிக்கப்படும்.

73.    பொதுமக்களுக்கு அனைத்து வகையான அரசு சேவைகளும் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்குடன் பொதுச் சேவைபெறும் உரிமைச் சட்டம் கொண்டு வந்துநிறைவேற்றப்படும்.

 

கடன் சுமையில்லா தமிழகம்

 

74.    தமிழக அரசின் நேரடிக்கடன் சுமையும், மின்வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் கடன் சுமையும் ரூ. 5.75 லட்சம் கோடியை தாண்டி விட்டது. இந்தக்கடன்சுமையை 5 ஆண்டுகளில் போக்குவதற்கான சிறப்புத்திட்டத்தை பா.ம.க. வகுத்திருக்கிறது. அதன் விவரம் வருமாறு:

*    தமிழக அரசுக்கு சொந்தமான கிரானைட் குவாரிகளை அரசே நடத்துவது மற்றும் போட்டி ஏலமுறையில் தனியாருக்கு வழங்குவதன் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக ரூ.25,000 கோடிவருவாய் கிடைக்க வகை செய்யப்படும்.

*    தாது மணல் குவாரிகளை சிறப்பாக நிர்வகிப்பதன் மூலம்  அரசுக்கு ஆண்டுக்கு ரூ.60,000 கோடி வருவாய் கிடைக்க வகை செய்யப்படும்.

*    ஆற்று மணல் விற்பனை முறைப்படுத்தப்பட்டு அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.20,000 கோடி கூடுதல் வருமானம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

*    வணிக வரி வசூலில் காணப்படும் குறைகள் களையப்பட்டு ஆண்டுக்கு ரூ.25,000 கோடி  கூடுதல் வரி வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

*    மேற்குறிப்பிட்ட 4 வகை நடவடிக்கைகளின் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.1,30,000 கோடி வருவாய் கிடைக்கும். முழுமையான மது விலக்கு நடைமுறைப் படுத்தப்படுவதால்அரசின் வருவாய் ரூ.25,000 கோடி அளவுக்கு குறையும். இதைக் கருத்தில் கொண்டால், தமிழக அரசுக்கு  ரூ. 1,05,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். இதில் ஆண்டுக்கு ரூ.45,000கோடி அரசின் கடனை அடைக்க செலவிடப்படும்.

 

ஒரு தலைக் காதல் கொலைகள்

 

75.    காவல்துறை சுதந்திரமாக செயல்படுவதை உறுதி செய்ய மாநில பாதுகாப்பு ஆணையம் ஏற்படுத்தப்படும்.

76.    ஒருதலைக் காதல் கொலைகளைத் தடுப்பது உட்பட பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தமிழக காவல்துறையில் தனிப் பிரிவு ஏற்படுத்தப்படும். இதன் தலைமைஇயக்குனராக பெண் ஐ.பி.எஸ் அதிகாரி நியமிக்கப்படுவார்.

77.    ஒருதலை காதல் கொலைகளால் கடந்த ஆண்டு ஜூன் முதல் பிப்ரவரி மாதம் வரை கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட 25-க்கும் அதிகமான பெண்களின் குடும்பங்களுக்கு தலாரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

மாவட்டங்கள் மறுசீரமைப்பு

78.    தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களும் மறுசீரமைக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் 12 லட்சம் பேர் இருக்கும் வகையில் மாவட்டங்களின் எல்லைகள் பிரிக்கப்பட்டு புதியமாவட்டங்கள் உருவாக்கப்படும்.

79.    தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னைதவிர்த்த பிற மாவட்டங்களில் குடிநீர் வசதியைச் செய்துதருவதற்காக ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

80.    சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக ஆந்திராவிலிருந்து கிருஷ்ணா நதி நீரையும்,  தமிழகத்தின் பிறபகுதிகளில் இருந்து நிலத்தடி நீரையும் கொண்டு வரநடவடிக்கை எடுக்கப்படும்.

 

அரசு ஊழியர் நலன்

 

81.    ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு 7ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் வரும் ஜூன் மாதத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படும். 1.1.2016 முதல் முன்தேதியிட்டுநடைமுறைப்படுத்தப் படும் இந்த பரிந்துரைகள் மூலம் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத்தொகை ஜூன் மாத ஊதியத்துடன்  சேர்த்து ஒரே கட்டமாக வழங்கப்படும்.

82.    அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளன்றே அவர்களுக்கான அனைத்து ஓய்வூதியப் பயன்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

83.    புதிய ஓய்வூதியத்திட்டம் இரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும்.

84.    தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5 லட்சம் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். இதன் மூலம் 5 லட்சம் படித்த இளைய தலைமுறைக்கு அரசு வேலைவழங்கப்படும்.

85.    அரசு ஊழியர்களுக்கான மாத ஊதியம் 15 நாட்களுக்கு ஒருமுறை வீதம் இரு தவணைகளில் வழங்கப்படும்.

86.    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு பதவி உயர்வு கிடைப்பது உறுதி செய்யப்படும்.

ஓய்வூதியப் பயன்கள்

87.    அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ரூ.2,000 கோடி மதிப்பிலான ஓய்வூதியப்பயன்கள் உடனடியாக வழங்கப்படும்.

88.    எருமைப்பாலுக்கு லிட்டருக்கு ரூ. 42-ம், பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.32-ம் கொள்முதல் விலையாக வழங்கப்படும்.

89.    இலங்கைப் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். மீட்கப்பட்டவுடன் அவற்றைசீரமைப்பதற்குத் தேவையான முழுத் தொகையையும் அரசே மானியமாக வழங்கும்.

90.    தமிழகத்தில் அமைக்கப்படும் நெடுஞ்சாலைகளின் தரத்திற்கு அதன் ஒப்பந்ததாரர்களே பொறுப்பேற்க வேண்டும். சாலைகள் தரம் குறைவாக இருந்து,  சேதமடைந்தால் அதற்கானஇழப்பீடு ஒப்பந்ததாரரிடமிருந்து வசூலிக்கப்படும்.

91.    எரிபொருள் சிக்கனம், சிறந்த பராமரிப்பு, நிர்வாக சீர்திருத்தம், வருவாய் அதிகரிப்பு ஆகியவற்றின் மூலம் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இலாபத்தில் இயங்கும் நிலைஏற்படுத்தப்படும்.

மெட்ரோ ரயில் திட்டம்

92.    சென்னை எழும்பூர் – திருமங்கலம் இடையிலான சுரங்கப்பாதையில் பெருநகர தொடர்வண்டித் திட்ட சேவைக்கான வெள்ளோட்டம் அடுத்த வாரம் தொடங்கப்பபடும். சோதனைஓட்டம் முடிவடைந்தபின், அப்பாதையிலும் போக்குவரத்துத் தொடங்கப்படும்.

93.    2017 ஆம் ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 45 கி.மீ. நீளமுள்ள சென்னைப் பெருநகர தொடர்வண்டித் திட்டத்தின் இருபாதைகளிலும் முழு அளவில் போக்குவரத்து தொடங்கப்படும்.இந்தப் பணிகளை விரைந்து முடிப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

94.    சென்னை மாநகரில் முதல்கட்ட பெருநகரத் தொடர்வண்டித் திட்டம் இந்த ஆண்டில் முடிவடைந்த பின்னர், அடுத்த ஆண்டில் 2ம்கட்ட பெருநகரத் தொடர்வண்டி திட்டப்பணிகள்தொடங்கப்படும்.

95.    இரண்டாம்கட்ட பெருநகர தொடர்வண்டித் திட்டம் 3 வழித்தடங்களில் மொத்தம் 123 கி.மீ. நீளத்திற்கு செயல்படுத்தப்படும். முதல் வழித்தடம் மாதவரம் முதல் செங்குன்றம் வரை50 கி.மீ. தொலைவுக்கும், 2வது வழித்தடம் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 25 கி.மீ. தொலைவுக்கும், 3வது வழித்தடம் பெரும்பாக்கம் முதல் விம்கோ நகர் வரை 47.7கி.மீ. தொலைவுக்கும் அமைக்கப்படும். இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.44,000 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

96.    சென்னையில் களங்கரை விளக்கம் முதல், சாத்தியமாகக்கூடிய தொலைவு வரை கடலில் படகுப் போக்குவரத்தை தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயப்படும்.

97.    தமிழகத்தில் நிலுவையிலுள்ள தொடர்வண்டித் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வசதியாக, அத்திட்டங்களுக்கான செலவில் 50 விழுக்காட்டை மாநில அரசு வழங்கும்.

மின் திட்டங்கள்

98.    அடுத்த 3 ஆண்டுகளில் 6220 மெகாவாட் மின்திட்டங்கள்  செயல்படுத்தப்படும்.

99.    அடுத்த 5 ஆண்டுகளில் 17,340 மெகாவாட் மின்திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

70.    பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் மின் தேவையில் 50 விழுக்காடு சூரியஒளி மின்திட்டம் மூலம் பெறப்படவேண்டும்.

101.    காற்றாலைகளை மாற்றி அதிக மின்சாரம் உற்பத்தி செய்தல்(Re-Powering), கலப்பின மின் உற்பத்தி தொழில்நுட்பம் (Hybrid Technology) ஆகியவற்றின் மூலம் புதுப்பிக்கத்தக்கஎரிசக்தி உற்பத்திச் செய்யப்படும்.

102.    தமிழ்நாட்டில் மின் உற்பத்தியை பெருக்குவதன் மூலம் மின்வாரியத்தின் வருவாயைப் பெருக்கி லாபத்தில் இயங்கும் நிலை உருவாக்கப்படும்.

103.    மின்வாரியத்தை லாபத்தில் இயங்கச் செய்வதன் மூலம் மின்வாரியத்தின் கடன்  படிப்படியாக அடைக்கப்படும்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை

104.    அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சிக்கு தமிழக அரசு உதவும். இதற்கான நிதி ரூ.40 கோடியை தமிழக அரசே வழங்கும்.

105.    தமிழ்நாட்டில் தமிழ் மொழி ஆய்வு மையம் ஏற்படுத்தப்பட்டு, தமிழ் மொழி வளர்ச்சிக்கான ஆய்வுப்பணிகள் ஊக்குவிக்கப்படும்.

106.    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நோயைத் தடுக்க சுகாதாரம் பேணப்படுவது அவசியமாகும். இதை கருத்தில் கொண்டு அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர்இலவசமாக வழங்கப்படும்.

107.    சுகாதாரம் மற்றும் துப்புரவை பராமரிப்பதற்கான அனைத்தும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

108.    தமிழ்நாட்டில் 108 அவசர ஊர்திகளின் எண்ணிக்கை 2017-2018 ஆம் ஆண்டில் 1,950 ஆக உயர்த்தப்படும்.

விழுப்புரத்தில் சித்த மருத்துவக் கல்லூரி

109.    விழுப்புரத்தில் அடுத்த ஆண்டு சித்த மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.

110.    பன்றிக் காய்ச்சலுக்கான ஆய்வு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படும். சிகிச்சைத் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

111.    பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் வாரத்திற்கு இரண்டு பாடவேளை நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்படுவது கட்டாயமாக்கப்படும்.

112.    பெண் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தமிழர்களின் மரபு சார்ந்த தற்காப்புக் கலைகள் கற்றுத்தரப்படும்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம்

113.    அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 73 ஆவது திருத்தத்தின்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும். 29 துறைகள்தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும்.

114.    உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கான 50% இடஒதுக்கீடு நடப்பு ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

115.    நகர்ப்புற நிர்வாக முறையின் (Urban Governance) அனைத்து முக்கிய அம்சங்களும் நகராட்சி நிர்வாகத்தின் அங்கங்களாக்கப்படும்.

116.    அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்ய தண்ணீர் பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும்.

117.    தண்ணீர் உரிமைத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு குடிநீருக்காக எவரும் ஒரு காசு கூட  செலவிடத் தேவையில்லை என்ற நிலை உருவாக்கப்படும்.

118.    எவரேனும் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை உருவானால், அதை நிரூபிக்கும் பட்சத்தில் அவர்கள் குடிநீருக்காக செலவிட்டதைப் போன்று 10 மடங்குத் தொகைஅவர்களுக்கு இழப்பீடாக வழங்கப்படும்.

முழு மதுவிலக்கு

119.    தமிழ்நாட்டில் புதிய அரசு பதவியேற்றவுடன் மதுவிற்பனை 2 மணிநேரம் குறைக்கப்பட்டது.  தமிழ்நாடு முழுவதும் இரு கட்டங்களில் தலா 500 மதுக்கடைகள் வீதம் 1,000மதுக்கடைகள் மூடப்பட்டன. எனினும், இதனால் மதுவிற்பனை எந்த வகையிலும் குறையவில்லை. படிப்படியாக மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கு ஏற்படுத்தும் திட்டம்வெற்றிபெறாது என்பதையே இதுகாட்டுகிறது.

120.    எனவே, தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. தொழிலாளர் நாளான மே 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் அனைத்துமதுக்கடைகளும் மூடப்பட்டு, முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்.

121.    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மது, பீர் ஆலைகளுக்கு வழங்கப்பட்ட உரிமம் இரத்து செய்யப்பட்டு, மது ஆலைகள் மூடப்படும். இதன் மூலம் தமிழகத்தில் ஒரு சொட்டு மதுகூடஉற்பத்தி செய்யப்படவில்லை என்ற நிலை ஏற்படுத்தப்படும்.

122.    கள்ளச்சாராயத்தை ஒழிக்கவும், குடிநோயர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

123.    அனைத்து மக்களின் பெயர் விவரம், வயது உள்ளிட்ட தகவல்கள் அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதால், 60 வயது நிறைவடைந்த அனைவருக்கும் அரசே தானாகநிதியுதவி வழங்கும். இதற்காக, எவரும் விண்ணப்பிக்க வேண்டிய தேவை இல்லை

124.    இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட அகதிகளின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை வரையறுக்கும் வகையில் சட்டம் இயற்ற மத்திய அரசு மூலம் தமிழக அரசு நடவடிக்கைஎடுக்கும்.

125.    தமிழ்நாட்டில் வாழும் ஈழத் தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழும் வகையில் அனைத்து வசதிகளும், சலுகைகளும் வழங்கப்படும். அவர்கள் விரும்பும் பட்சத்தில், அவர்களுக்குஇரட்டைக் குடியுரிமை வழங்க மத்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்தும்.

மாற்றுத்திறனாளிகள் நலன்

126.    மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 3% இட ஒதுக்கீடு வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.

127.    கன்னியாகுமரி மாவட்டம் பசுமைச் சுற்றுலாத்தளமாக அறிவிக்கப்படும்.

128.    தமிழ்நாட்டில் மத்திய அரசு அமைத்த 12 ஸ்மார்ட் நகரங்களை (Smart City) விரைவாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

129.    நகரங்களில் பேருந்து நிலையம், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இலவச வை-ஃபை (Wi-Fi) வசதி செய்துத்தரப்படும்.

130.    நகர்ப்பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீட்டுமனைகளின் விலையை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

131.    பெண்களுக்கான திருமண வயதை 21-ஆக உயர்த்தும்படி மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.