மீனவர் போராட்டம் முடிவுக்கு வந்தது!

Must read

ராமேஸ்வரம்:

மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்தும், மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கோரியும் கடந்த ஆறு நாட்களாக, ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்திவந்த போராட்டம், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து முடிவுக்கு வந்தது.

பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்மலா சீதாராமன் இன்று  தங்கச்சிமடத்தில் போராட்டக்காரர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். . மீனவர் பிரிட்ஜோவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து பேசிய நிர்மலா சீதாராமன், ’மத்திய அரசு மீனவர்கள் பிரச்னையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கும். வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து விவாதிக்க இருக்கிறோம். ஆகவே, போராட்டத்தை கைவிடுங்கள். இறந்தவரின் உடலை பெற்று, அடக்கம் செய்யுங்கள்’, என்று கோரிக்கை விடுத்தார்.

நிர்மலா சீதாராமனின் கோரிக்கையை ஆரம்பத்தில் மீனவர்கள் ஏற்க மறுத்தனர். அவர்கள், ’கடந்த 35 வருடங்களில் ஐநூறுக்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படை கொன்றுள்ளது. இது குறித்து மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  ஆகவே, உங்கள் பேச்சை நம்பி போராட்டத்தை கைவிட முடியாது’, என்று தெரிவித்தனர்.

அவர்களுடன் . நிர்மலா சீதாராமன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சீதாராமன், ‘தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து மத்திய அரசு நிச்சயமாக உறுதியான  நடவடிக்கை எடுக்கும். மீனவர்  இறந்து ஆறு நாட்கள் ஆகியும், அவரது தாய் தன் மகனின் உடலைக்கூட பார்க்காமல் போராடிக்கொண்டிருக்கிறார். அவரது உணர்வைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதே நேரம், அவர், பொதுநலன் கருதி, தன் மகனின் உடலைப் பெற்று நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதற்கு, போராட்டக் குழுவினருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பதாக தெரிவித்தார். நல்ல முடிவு எடுக்கப்படும் என்று நம்புகிறேன்” என்றார்.

தொடர்ந்து மீனவர்களுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த நிலையில் அவரது உறுதிமொழிகளை ஏற்று போராட்டதைக் கைவிடுவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article