எக்ஸ்ளூசிவ்: ஜல்லிக்கட்டை நான் எதிர்க்கவில்லை! : காங். எம்.எல்.ஏ. விஜயதரணி விளக்கம்

Must read

காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி, ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக சமூகவலைதளங்களில் பரவிவரும் கருத்தை அவர் மறுத்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில்,  பேசிய விஜயதரணி ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு எதிராக பேசியதாக சமூகவலைதளங்களில் ஒரு பதிவு உலாவருகிறது.

இது குறித்து விஜயதரணியிடம் தொடர்புகொண்டு பேசினோம். அவர், “அந்த தொலைக் காட்சி நிகழ்ச்சியில் நான் பேசியதை கவனித்துக் கேட்டாலே புரியும்.. நான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசவில்லை என்பது!

அந்த நிகழ்சிசயிலேயே, “நிச்சயமாக ஜல்லிக்கட்டை நான் ஆதரிக்கிறேன். தமிழகத்தின் சில பகுதிகளில் ஜல்லிக்கட்டு பாரம்பரியமாக நடந்துகொண்டிருப்பது உண்மைதான். அதை தடை செய்ததும் ஏற்க முடியாது” என்று  பேசியிருக்கிறேன்.

இதிலிருந்தே தெரியவில்லையா,.. நான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இருக்கிறேன் என்பது?

இந்தப் பிரச்சினையை மத்திய பாஜக அரசு நினைத்திருந்தால் ஒரே நிமிடத்தில் சரி செய்திருக்க முடியும். அதாவது ஒரே ஒரு நோட்டிபிகேசன் கொடுத்தால் போதும். “பொங்கலை முன்னிட்டு குறிப்பிட்ட ஐந்து நாட்கள் ஜல்லிக்கட்டை நடத்திக்கொள்கிறோம் என்று நோட்டிபிகேசன் கொடுக்கலாம். நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கும் போதும் இப்படி செய்யலாம்.

அப்படி செய்தால் இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும். அதை மத்திய பாஜக அரசு விரும்பவில்லை. இந்த ஜல்லிக்கட்டு பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கினால், பண மதிப்பிழப்பு, பெட்ரோல் – டீசல் விலை உயர்வு போன்ற விவகாரங்களை மக்கள் மறந்துவிடுவார்கள் என்று திசைத்திருப்பும் நோக்கத்துடன் செயல்படுகிறது மத்திய பாஜக அரசு. மாநில அரசும் போலீசை ஏவி பிரச்சினையை பெரிதாக்கி மற்ற பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்புகிறது.

இதற்கு மாணவர்கள் பலியாகிவிடக்கூடாது என்ற நோக்கத்தில்தான் இதைவிட முக்கிய பிரச்சினையான பண மதிப்பிழப்பு விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றேன்.

பண மதிப்பிழப்பால் எத்தனையோ பேர் இற்தார்களே… முதியவர்கள் பெண்கள் வரிசையில் நின்று செத்தார்களே விவசாயிகள் செத்தார்களே… இதெல்லாம் கொடுமை இல்லையா?

ஆகவேதான், ஜல்லிக்கட்டு போராட்டத்தை வைத்து மாணவர்களை மக்களை திசை திருப்பும் வேலையை மத்திய அரசு செய்கிறதோ என்ற என் ஐயப்பாட்டை தெரிவித்தேன். இது மக்கள் நலன் சார்ந்த ஐயப்பாடுதானே!

இப்போதும் சொல்கிறேன்.. மிக எளிதில் தீர்க்க வேண்டிய ஜல்லிக்கட்டு விவகாரத்தை மக்களை திசைத்திருப்புவதற்காக வேண்டுமென்றே வளர்க்கிறது மத்திய பாஜக அரசு.

ஆகவேதான், தற்போது என்னை வைத்தும் காங்கிரஸ் கட்சியை குறை கூற முயற்சிக்கிரார்கள் பாஜகவினர்.

மீண்டும் சொல்கிறேன்.. ஒரே ஒரு நோட்டிபிகேசன் கொடுத்து இந்த பிரச்சினையை மத்திய பாஜக அரசு தீர்க்கலாம். அதைச் செய்ய வேண்டும். அதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளும் ஆதரவு அளிக்கும்.

செய்யுமா பாஜக அரசு?”  என்று தன் ஆதங்கத்தைக் கொட்டினார் விஜயதரணி.

 

More articles

Latest article