தான் நீதிக்கு எப்போதும் தலை வணங்குவதாகவும், ஓடி ஒளிந்து தலைமறைவாக இருக்கப்போவது இல்லை என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம், “நாம் சுதந்திரத்தை பெறவும் போராடுகிறோம், காக்கவும் போராடுகிறோம். ஜனநாயக மீது எனக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் நிறைய நடந்து விட்டது. பலருக்கும் கடந்த ஒருநாள் நிகழ்வுகள் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம். ஐஎன்எக்ஸ் வழக்கில் என்னை நேரடியாக குற்றஞ்சாட்டவில்லை. ஐஎன்எக்ஸ் வழக்கில் குற்றப்பத்திரிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை.

அதேபோல் எப்ஐஆரில் என்னுடைய பெயர் இல்லை. நான் தவறு செய்ததாக எங்கும் குற்றச்சாட்டு இல்லை. இந்த வழக்கில் நிறைய பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள். பொய் சொல்வதில் வல்லமை படைத்தவர்கள் இதில் பொய்யை பரப்புகிறார்கள். உண்மையை ஆனால் யாரும் மறைக்க முடியாது.

எனக்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. நான் அதற்கு எதிராக மனுதாக்கல் செய்தேன். எனக்கு 2018 மே மாதமே விசாரணையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று எனக்கு டெல்லி ஹைகோர்ட் முன் ஜாமீன் வழங்கப்படவில்லை. இதனால் நான் சுப்ரீம் கோர்ட் சென்றேன்.

ஆனால் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் அவசரமாக விசாரிக்க மறுத்துவிட்டார்கள்.இதனால் அவசர அவசரமாக நாங்கள் இரவு முழுக்க முன் ஜாமீன் மனுக்களை தயார் செய்தோம்.நான் சட்டத்தில் இருந்து மறைந்து ஒளியவில்லை. நான் சட்டத்தில் இருந்து தப்பி செல்லவில்லை. ஆனால் என் மீது தவறாக புகார் கூறினார்கள்.

என் மீதும், என் குடும்பம் மீது எந்தவிதமான முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை. விசாரணை ஆணையம் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். நான் சட்டத்தை மதிக்கிறேன், எங்கும் செல்லவில்லை. நான் தலை நிமிர்ந்து நடப்பேன். வெள்ளிக்கிழமை வழக்கு விசாரணை வரை ஆணையம் பொறுமை காக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.