லக்னோ: கடந்த 2017ம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதீய ஜனதா அரசு பதவியேற்றதிலிருந்து தற்போது முதன்முறையாக விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவையில் மொத்தம் 23 பேர் பதவியேற்றுக்கொண்டனர்.

இவர்களில் புதுமுகங்களும், கேபினட் அந்தஸ்திற்கு உயர்த்தப்பட்டவர்களும் அடக்கம். இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் பிராந்தியங்கள் மற்றும் ஜாதிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

பிராமின், சத்ரிய மற்றும் வைஸ்ய ஜாதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மோடியின் வாரணாசி தொகுதிக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

வாரணாசி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளின் 2 உறுப்பினர்களில் ஒருவரான அனில் ராஜ்பர் கேபினட் அமைச்சராகவும், மற்றொருவரான நீல்கண்ட் திவாரி இணையமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர்.

இந்த அமைச்சரவையின் இன்னொரு முக்கியத்துவம் என்னவென்றால், முசாபர்நகர் கலவரத்தில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படும் சுரேஷ் ரானாவும் இணைந்திருப்பதுதான். மொத்தம் 6 புதிய கேபினட் அமைச்சர்கள், 6 தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள் மற்றும் 11 இணையமைச்சர்கள் இந்த அமைச்சரவையில் அடக்கம்.