ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைதுசெய்ய மத்திய அரசின் நிறுவனங்களான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்றவை துடிப்பது ஊழலுக்கு எதிரான நடவடிக்கை அல்ல; அது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான் என்று ஆதாரத்துடன் விவரித்துள்ளார் கட்டுரையாளர் ஷிவம் விஜ்.

அவர் கூறியிருப்பதாவது, “கடந்த 2010ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, சொரபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் கைதுசெய்யப்பட்டார் அப்போதைய குஜராத் அமைச்சர் அமித்ஷா. இந்த வழக்கு அமித்ஷா மற்றும் மோடியின் அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

தற்போது வரலாறு அப்படியே திரும்பியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சராக அமித்ஷா வீற்றிருக்கிறார். ப.சிதம்பரம் வெறும் ராஜ்யசபா உறுப்பினர் மட்டுமே. எனவே, அன்று தனது கைதுக்கு காரணமாக இருந்த ப.சிதம்பரத்தை இன்று குறிவைக்கிறார் அமித்ஷா.

ஆனால், இதை சிலர் ஊழலுக்கு எதிரான பா.ஜ. அரசின் நடவடிக்கை என்று பிதற்றக்கூடும். ஆனால், அது உண்மை என்றால் ரஃபேல் தொடர்பான விரிவான விசாரணைக்கு உத்தரவிடலாமே? ஐந்தாண்டுகள் ஆகியும் எதற்காக லோக்பாலை நியமிக்கவில்லை?

பாரதீய ஜனதா கட்சியிலேயே இருக்கும் பல தலைவர்கள் ஊழல் புகாரில் சிக்கியவர்களாக இருக்கிறார்கள். மேலும், மாற்றுக் கட்சியில் இருக்கும் தலைவர்களின் மீது ஊழல் புகார்கள் இருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக பயமுறுத்தும் பாரதீய ஜனதா, அவர்கள் தன்னுடன் வந்து இணைந்தவுடன் அவர்கள் மீதான அனைத்தையும் கைவிட்டு, பதவியும் தந்து அழகு பார்க்கும்.

தற்போது கர்நாடக முதல்வராக இருக்கும் எடியூரப்பா மீது நிலமோசடி உள்ளிட்ட பல்வேறான புகார்கள் இருக்கின்றன. ஆனால், அதற்கான ஆதாரங்கள் இல்லை என்று மேலதிக நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளன.

கர்நாடகாவில் எடியூரப்பா ஒருபக்கம் என்றால், பெல்லாரியின் ரெட்டி சகோதரர்கள் இன்னொரு பக்கம். இவர்களின் மீதுள்ள சுரங்க முறைகேட்டுப் புகார்கள் அதிகம். ஆனாலும் நடவடிக்கை இல்லை.

அஸ்ஸாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த ஹிமந்த பிஸ்வா சர்மா ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்தார். ஆனால், பாரதீய ஜனதாவில் சேர்ந்தவுடன், அவர் அமைச்சராகவும் ஆக்கப்பட்டு, தற்போது மிகப்பெரிய பொறுப்பிலும் அமர்த்தப்பட்டுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் பாரதீய ஜனதா முதல்வராக இருந்த சிவராஜ் சிங் செளஹானின் மீது பெரியளவில் படிந்த வியாபம் ஊழல் குற்றச்சாட்டு அப்படியே முடங்கியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்த முகல் ராயை, சாரதா சிட்ஃபண்ட் மோசடியை காட்டியே தன்னுள் இழுத்தது பாரதீய ஜனதா. தற்போது அக்கட்சியில் இணைந்ததும் அவர் புனிதராகிவிட்டார்.

தற்போதைய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், உத்ரகாண்ட் மாநில முதல்வராக இருந்தபோது ஊழல் மோசடிகளில் அவரின் பெயர் அடிபட்டது. ஆனால், தற்போது அவர் மத்தியில் முக்கிய துறையின் அமைச்சர்.

மராட்டியத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கூட்டணி அரசில் பல்லாண்டுகள் அமைச்சர் பதவி வகித்தவருமான நாராயண் ரானேவின் மீதிருந்த மோசடி புகார்கள் அனைத்தும், அவர் பாரதீய ஜனதாவில் சேர்ந்தவுடன் மறைந்துவிட்டது. தற்போது அந்த ரானேவை ராஜ்யசபா பதவி கொடுத்து அழகு பார்க்கிறது பாரதீய ஜனதா.

எனவே, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் என்று மத்திய அரசு சொல்வதெல்லாம் பித்தலாட்டமே. அது தொடர்ச்சியாக அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என்று விமர்சித்துள்ளார் கட்டுரையாளர்.