(நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி.. தொடர்ச்சி…)

சீமான்

தமிழ்த்தேசியத்தில் ஈடுபாடு உள்ள சிலர்தான், தமிழ்நாடு அடிமைத்தனத்தில் இருந்து வெளியே வர தமிழரசன் வழிதான் சரி என்று சொல்றாங்க..

அதான் சொன்னேனே… அப்படி ஒரு கூட்டம் இருக்கு. வீணாப்போன கூட்டம். திண்ணையிலேயே உக்காந்து தெண்டமா பேசி சாவானுங்கள்ல.. அவனுங்க பேசறது..!  சரி என்ன பண்ணலாம்னு சொல்லச் சொல்லுங்க.

தமிழரசன் வழி என்று அந்த சிலர் சொல்வது ஆயுத வழிதானே…

சரி. யாரு ஆயுதத்தை எடுத்துக்கிட்டு வர்றது? வரச் சொல்லுங்க.. அவங்க பின்னால போவோம்..  அதுல்லாம் சும்மா பைத்தியக்காரனுங்க பேச்சு.

தமிழரசன், கலிய பெருமாளைவிடவா இவங்க முயற்சி செஞ்சுட போறாங்க..? அதெல்லாம் முடிஞ்சுபோச்சு. கடைசி காலத்துல கலியபெருமாள் எழுதிய தன்வரலாறு புத்தகத்துல, மக்களை அணி திரட்டி அரசியல் படுத்தாமல் புரட்சியை முன்னெடுக்க முடியாதுன்னு  எழுதியிருக்கிறார். 

அவ்வளவு அனுபவப்பட்டவர்  சொல்றதைக் கேட்கிறதா  இவனுங்க சொல்றதைக் கேட்கிறதா..?

ஈழம் குறித்தும் அவங்க சொல்றாங்க..

ஈழத்தையும் தமிழ்நாட்டையும் ஒப்பிடக்கூடாது. ஈழத்தில் ஆயுதம்கொண்டு எம் மக்களை எதிரி அடிமைப்படுத்துகிறான்.  ஆகவே பதிலுக்கு ஆயுதம் ஏந்த வேண்டியிருந்தது.

இங்க  தமிழ்நாட்டில், என்கிட்ட இருந்தே வாக்கை வாங்கி, அதிகாரத்தைக் கைப்பற்றி என் உரிமையைப் பறித்து அடிமைப்படுத்துறான்.  அப்போ நான் எடுக்க வேண்டியது துவக்கு இல்லை.. வாக்கு.

“நீ என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை, உன் எதிரியே தீர்மானிக்கிறான்” என்று புரட்சியாளர் சே சொன்னார் அல்லவா?

கமல் – ரஜினி

கமல், ரஜினி ஆகியோரின் அரசியல் பிரவேசத்தை கடுமையாக எதிர்க்கிறீங்களே..

திரையுலகில் நடிச்சு, புகழ் வெளிச்சம் பெற்றுவிட்டாலே, நாட்டை வழி நடத்தும் தகுதி வந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை. தமிழ்நாடு  சபிக்கப்பட்ட நிலமா இருக்கு. திரையுலகிலேயே தலைவர்களைத் தேடும் நிலை இருக்கிறது. இப்படித் தேடித்தேடித்தான் தன்னலமற்ற தலைவர்கள் பலரை இழந்துவிட்டோம்.

இது ஒரு நோய்தான். இந்த நிலை மாறணும்.

நீங்களும் திரைத்துறையைச் சேர்ந்தவர்தானே..?

கமலும் நானும் ஒண்ணா?  நான் அரசியலில் இருந்துதான் சினிமாவுக்குப் போனேன்.  25 வருசமா பெரியாரியம் மார்க்சியம் அம்பேத்காரியம் தளத்தில் பேசிக்கொண்டே இருக்கிறேன்.

பேசி, போராடி, சிறைக்குப் போயிருக்கேன். என் நோக்கத்துக்கு சினிமா ஒரு கருவி. அதைப் பயன்படுத்திக்கிறேன் அவ்வளவுதான்.

என்னைப்போலவே ரஜினியும் கமலும் அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருந்தால் நான் குறை சொல்லப்போவதில்லை.

ஆனால் வயசாகி மார்க்கெட் போற வரைக்கும் திரைத்துறையில் இருந்துட்டு, அதுக்கப்புறம் அரசியலுக்கு வர்றாங்க.

தவிர.. ஜெயலலிதா  கருணாநிதி ஆண்டபோதும் இப்போது போல அநியாயங்கள் இருந்தன.. ஊழல் இருந்தது… அராஜகம் இருந்தது.. அடக்கு முறை இருந்தது.

அப்போதெல்லாம இவற்றை எதிர்த்து இவர்கள் பேசியிருந்தால் இப்போது இவர்கள் அரசியலுக்கு வரும்போது வரவேற்கலாம்.

அதுவும் ஜெயலலிதா மறைந்துவிட்டார்.. கருணாநிதி வயோதிகத்தால் முடியாமல் இருக்கிறார்…  இப்படி  யாருமில்லா இடத்துல வாங்கடானு கம்பு சுத்தினா என்ன அர்த்தம்..?

சீமான்

“25 வருசமா பெரியாரியம் மார்க்சியம் அம்பேத்காரியம் தளத்தில் பேசிக்கொண்டே இருக்கிறேன்” என்றீர்கள். நீங்கள் பெரியார் மீது மரியாதை வைத்திருக்கிறார்கள். ஆனால் உங்கள் அமைப்பச் சேர்ந்த சிலர் பெரியார் பற்றி அருவெறுப்பானவகையில் சமூகவலைதளங்களில் விமர்சனம் செய்கிறார்களே. அவங்களுக்கு அரசியல் பயிற்சி வகுப்பு எடுத்து புரிதலை ஏற்படுத்தலாமே!

நாம் தமிழர்க கட்சியைச் சேர்ந்த பிள்ளைகள் அப்படி எழுத மாட்டாங்க. வேற ஆளுங்கதான் இப்படி எழுதிட்டு போறாங்க.. உங்களை மாதிரி ஆளுங்க கேட்ணும்னே செய்யறாங்க.

மத்தபடி பெரியார் நமக்கு ஒரு பிரச்சினையே கிடையாது. அவரை எதிர்க்கணும் என்பதோ கொண்டாடணும் என்பதோ நமக்கு  எண்ணம் இல்லை.. அதைததாண்டி இப்போ பல்வேறு சிக்கல்கள்ல தமிழர் நிலம் மாட்டிக்கிட்டிருக்கு.   தண்ணீருக்கே திண்டாட வேண்டியிருக்கு. அடிப்படையே அல்லாடிக்கிட்டிருக்கு.. இந்த நிலையில் அதையெல்லாம் பேசணும்னு தேவையில்லை.

எங்கயாவது ஒரு பையன் புரியாம பெரியார் பத்தி எழுதிக்கிட்டிருப்பான். மற்றபடி  கட்சியின் தத்துவமோ கொள்கையோ அது இல்லை.

பேட்டி: டி.வி.எஸ். சோமு

 

பேட்டியின் முதல் பகுதி:

 

நாயக்கர் மகாலை இடிக்கணும்னு நான் பேசியதா எந்த முட்டாப்பய சொல்றான்? சீமான் ஆவேச பேட்டி