நாயக்கர் மகாலை இடிக்கணும்னு நான் பேசியதா எந்த முட்டாப்பய சொல்றான்? சீமான் ஆவேச பேட்டி

Must read

தாஜ்மகாலை சுற்றுலா பட்டியலில் இருந்து நீக்கிய ம.பி. பாஜக அரசை கடுமையாக விமர்சித்திருக்கிறார் சீமான்.  ரஜினி – கமல் அரசியல் குறித்தும் சூடாக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் இந்த நிலையில், patrikai.com  இதழ் சார்பாக  அவரிடம் சில கேள்விகளை வைத்தோம்.

உத்தரப் பிரதேச மாநில சுற்றுலாத் துறைக் கையேட்டில் இருந்து தாஜ்மஹால் நீக்கப்பட்டுள்ளதை கடுமையாக  கண்டித்திருக்கிறீர்களே..!

ஆமாம்.. கடுமையாக கண்டிக்க வேண்டிய விசயம்தானே? சாதி மதம் கடந்து எல்லா தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுகிற தாஜ்மகாலை மதக் கண்ணோட்டத்துடன் அணுகுகிறது யோகி ஆதித்யநாத் தலைமையிலான  ம.பி.  பாஜக அரசு. கேட்டால்,  “அந்தக் கட்டிடம் இந்திய பாரம்பரியப்படி கட்டப்படவில்லை” என்று விளக்கம் வேறு கொடுக்கிறது.

இந்தியா என்று ஒரு நாடே கிடையாதே!  வெள்ளையர்களால்  உருவாக்கப்பட்டதுதானே இந்தியா? பிறகு எப்படி இந்திய பாரம்பரியம் என்று ஒன்று இருக்கும்?

பாபர் முந்தாநாள் வந்தான் என்றால், இவர்கள் அதற்கு முதல்நாள் வந்தார்கள்.

பாபர் முந்தாநாள் வந்தான் என்றால், இவர்கள் அதற்கு முதல்நாள் வந்தார்கள்.

நான் தமிழ் பேசுகிறேன். இந்த மண்ணின் பூர்வீக மக்கள் நாங்கள் எனக்கு ஈராயிரம் ஆண்டுக்கு மேல் பாரம்பரியம் இருக்கு… இவர்களுக்கு என்ன பாரம்பரியம் இருக்கு?

சரி.. தாஜ்மகாலை ஏற்க முடியாது என்கிறீர்கள்.. பாராளுமன்றத்தை இடிச்சுட்டு வேறு கட்ட வேண்டியதுதானே..? செங்கோட்டை, இந்தியா கேட் எல்லாம்கூட வெளியாட்கள் கட்டியதுதானே.. அதையெல்லாம் இடித்து விடுவீர்களா?

நீங்களும்கூட மதுரை நாயக்கர் மகாலை இடிக்க வேண்டும் என்று திருப்பூர் கூட்டத்தில் பேசினீர்களே..

நாயக்கர் மகாலை இடிக்கணும்னு நான் பேசியதா எந்த முட்டாப்பய சொல்றான்?

இடிக்க வேண்டும் என்று நான் பேசவில்லை.  அந்த மகால்,  நாயக்கர்களுக்கு பெருமை சேர்க்கும் சின்னம். அதே நேரம் தமிழர்களுக்கு அது இழிவான அடையாளம்.

“நாயக்கர்மகாலை இடிப்பதாக நான் சொல்லவே இல்லை.”

மற்றபடி நாய்க்கர் மகாலை இடிக்க வேண்டும் என்று பேசவே இல்லை. முட்டாள்கள் இப்படித்தான் இல்லாததை எல்லாம்  சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

உங்களுடன் கருத்தொற்றுமை உள்ளவர்களுடன் சேர்ந்து, “கல்லணை தினம்” என்று நீங்கள் கடைபிடிக்கலாமே…

அதிகாரம் வேணுமே…!

தமிழ்க்கடவுளான முப்பாட்டன் முருகனுக்கு தைப்பூச நாளில் உலகமெங்கும் உள்ள தமிழர்கள் விழா எடுக்கிறார்கள். அன்று அரசு விடுமுறைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.

அப்போதைய முதல்வர் ஜெயலலிதா என்ன செய்தார்? அந்த காலகட்டத்தில் நாயக்கர்கள் என்னை ஏசிக்கொண்டிருந்தார்கள். அப்போ சீமானுக்கு எதிரா செய்கிறேன் பார் என்று அதிகாரத்திமிரில் ஜெயலலிதா ஒரு உத்தரவு போட்டார்.  “தைப்பூசம் அன்று அரசு விடுமுறை. ஏன்னா, திருமலை நாயக்கர் அன்றுதான் பிறந்தார்” என்று ஜெயலலிதா அறிவித்தார். ஏன்னா, இந்தம்மாதானே பிரசவம் பார்த்தாங்க…  (சிரிக்கிறார்.)

இதை ஏன் சொல்கிறேன் என்றால், அதிகாரம் இருந்தது.. திமிரா ஜெயலலிதா அறிவிச்சாங்க. சீமானுக்கு எதிரா செய்யறேன்னு அதிகாரத்திமிரில் செய்தார்.

எங்களுக்கு அதிகாரம் வரும். அப்போது நிச்சயம் கல்லணை தினம் உட்பட தமிழர் பண்பாட்டை நினைவுபடுத்தும் பல தினங்களைக் கொண்டாடுவோம்.

அதிகாரம் என்றதும் நினைவுக்கு வருகிறது. “நான் முதல்வரா இருந்தா, நீட்டை நீக்காத வரை மருத்துவக்கல்லூரிகளை திறக்க முடியாமல் பூட்டு போட்டுவிடுவேன்” என்று பேசினீர்களே..

ஆம்! இந்தியாவிலேயே மருத்துவக்கல்லூரி அதிகமா உள்ள மாநிலம் தமிழ்நாடுதான். அதில ஊரான் வந்து படிச்சுட்டு போகணும்.. எங்க பிள்ளைகள் படிக்க முடியாம திண்டாடனுமா..

எனக்கு பயன்படாத கல்லூரியை நான் ஏன் நடத்தணும்…?

முதல்வரால் மருத்துவக்கல்லூரியை மூட முடியுமா என்பதுதான் கேள்வி?

ஏன் முடியாது…?  வேலூர் சி.எம்.சி. என்பது ஒரு தனியார் கல்லூரி. அந்தக் கல்லூரியே, நீட்டை நீக்கலேன்னா கல்லூரியை திறக்க முடியாதுன்னு சொல்லலையா?  ஒரு தனியார் கல்லூரி செய்யும்போது, அரசால் செய்ய முடியாதா?

ஆந்திராவில் என்.டி.ஆர். மத்திய அரசு அலுவலகங்களுக்கு எல்லாம் ஒரே நாளில் பூட்டு போட்டார். உடனே மத்திய அரசு ஓடி வந்து என்ன வேணும்னு கேட்கலையா..

அதனால நான் முதல்வராக  இருந்திருந்தால் நிச்சயம் செய்திருப்பேன்.

இந்திய அமைப்பில் முதல்வருக்கு இருக்கும் அதிகாரம் உங்களுக்குத் தெரியும். இதை வைத்து நீங்கள் நினைப்பதை எல்லாம் சாதித்துவிட முடியும் என்று நினைக்கிறீர்களா..?

மடையன்கள் கேட்கிற கேள்வி இது. முதல்வர் ஆனால் பல விசயங்களைச் செய்ய முடியும். குறைந்தபட்சம் தாய்மொழியில படிச்சா வேலை கிடைக்கும் என்கிற நிலையை உருவாக்க முடியும்.  ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு 22 ஆயிரம் தடுப்பணையை கட்டுறாரு.. 10 ஆயிரம் கிலோ மீட்டர் நதிகளை இணைச்சுக்கிட்டு வர்றாரு..  இதெல்லாம்  மத்திய அரசைக் கேட்டா செய்யறாரு..?

கல்வி மருத்துவம் எல்லாம் பொதுப்பட்டியலுக்கு போயிருச்சின்னு ஆதங்கப்படுறீங்க.  நான் தமிழக முதல்வராக இருந்தால்,  தென்மாநில முதல்வர்கள் எல்லோரும் கூடி மாநாடு போட்டு கல்வியும், மருத்துவமும் மாநில பட்டியலுக்கு தர்றியா இல்லையா என்று மத்திய அரசைக் கேட்பேன்.  சண்டை போடுவேன்.  மத்திய அரசோட  சண்டை போட்டு உரிமைகளை வாங்க, நமக்கு அதிகாரம் வேணுமே.

சீமான்

இப்போ நான் போயி கேட்டா சந்திரபாபு நாயுடு வருவாரா?  நான் முதல்வரா இருந்தா வருவாரு.

ஏற்கெனவே முதல்வரா இருந்த கருணாநிதி ஜெயலலிதா பேசியிருந்தா வந்திருப்பாரு. இவங்களுக்கு அந்த எண்ணமே இல்லை.

 ஈழத்தில் இனப்படுகொலை நடந்தபோது, தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, அடிமையான என்னால் என்ன செய்ய முடியும் என்றார்..

அடிமை எப்படி முதலமைச்சரா ஆனது?  ஒண்ணுத்துக்கும் உதவாத பதவிதானே.. அதிகாரம் இல்லாத பதவி தானே…? அதை அடைய ஏன் இப்படி அலையறீங்க.. இத்தனை பாடுபறீங்க..?

ஒண்ணுத்துக்கும் உதவாத பதவிக்கு  ஏண்டா இத்தனை போட்டி பொறாமை.. சண்டை..? ஏன் காசு கொடுத்து ஓட்டுவாங்கணும்.. ஏன் இவ்வளவு சிரமப்படணும்?

தவிர.. ஒண்ணுத்துக்கும் உதவாத பதவியில இருந்து எப்படி இத்தனை லட்சம் கோடி எப்படி கொள்ளையடிக்க முடியுது?

அது ஒருபக்கம் இருக்கட்டும். கருணாநிதி அடிமைதான்.  ஆனால், நான் அடிமைத்தளையில் இருந்து விடுதலை பெற போராடும் போராளி. அதனால் முதல்வர் பதவியை வைத்து என்னால் பல சாதனைகளை செய்ய முடியும்.

மற்றபடி, “முதல்வர் பதவியால் பயனில்லை” என்று சில முட்டாப்பயல்கள்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவனுங்கதான், “இது சரியா வராதுங்க.. அது  ஆகாதுங்க இது வேணாங்க” என்றெல்லாம் பேசுவார்கள்.. வெட்டிப்பயல்களின் பேச்சு அது.

(ஆயுத போராட்டம், கமல் ரஜினி அரசியல், பெரியார்… உட்பட சில கேள்விகள் அடுத்த பகுதியில்.)

பேட்டி:  டி.வி.எஸ். சோமு

More articles

Latest article