பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு காரணமாக அரசியல் கட்சியினர் இடையே விவாதம் எழுந்த நிலையில், இது குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் குழு ஒன்றை அமைத்துள்ளது.

“ஒரு நாட்டின் பிரதமருக்கு பாதுகாப்பு இல்லாத நாடு வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நாடு” என்று இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் சித்தார்த் பதிவிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அதற்காக சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக சித்தார்த் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் அவர் மீது தேசிய மகளிர் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நடவடிக்கையில் இறங்கியுள்ளதோடு காவல்துறையிலும் புகார் அளித்துள்ளனர்.

பா.ஜ.க. தலைவர்கள் நீலம் பார்கவ ராம் மற்றும் பிரேர்னா ஆகியோர் ஹைதராபாத் காவல் துறையில் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்துள்ள போலீசார் சித்தார்த் மீது இந்திய தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவு 67 மற்றும் இ பி கோ 509 ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பெண்களை கண்ணிய குறைவாக பொதுவெளியில் பேசுவது தொடர்பாகவும், சமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்துகளை பதிவு செய்தது தொடர்பாகவும் சித்தார்த் மீது எப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது.