டில்லி

னி இடம் மாறி செல்வோர் ஆதார் எண்ணை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களைப் பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தற்போது நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கைத் தொடர் கூட்டத்தின் இரண்டாம் கட்ட அமர்வு நடந்து வருகிறது.   இதில் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு நுகர்வோர் விவகாரம்,  உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பதில் அளித்தார்.

அவர் தனது பதிலில்,.

“ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.   நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தாங்கள் வேலைக்கு செல்லும் ஊர்களில் ரேஷன் பொருட்கள் பெறுவதில் உள்ள சிக்கலை மனதில் கொண்டு, இந்த திட்டத்தை பிரதமர் மோடி வகுத்துள்ளார்.

இந்தியாவில் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. மொத்தம் உள்ள 80 கோடி ரேஷன் பயனாளிகளில் 77 கோடி பேர் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த திட்டப்படி ஒரு புலம்பெயர் தொழிலாளி, தான் வேலைக்குச் செல்லும் ஊரில் ரேஷன் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், அவருடைய குடும்பத்தினர், அவர்கள் வசிக்கும் ஊர்களில் தங்கள் பங்கான உணவு தானியங்களைப் பெற்றுக்கொள்ளலாம். இதனால் வேறு ஊர்களுக்கு இடம் மாறி செல்லும்போது,  ரேஷன் பொருட்கள் வாங்க புதிய ரேஷன் கார்டு பெற தேவையில்லை.

தங்களது ரேஷன் கார்டின் எண்ணையோ அல்லது ஆதார் எண்ணையோ எந்த ரேஷன் கடையிலும் தெரிவித்து, ‘பயோமெட்ரிக்’ மூலம் அடையாளத்தை உறுதி செய்து கொண்டு, பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம்.   தவிர அதே ஊரில் இருந்தாலும், ரேஷன் கார்டு கொண்டு செல்லாமல், ஆதார் எண்ணை தெரிவித்து, ‘பயோமெட்ரிக்’ அடையாளத்தை உறுதி செய்து கொண்டு பொருட்கள் பெறலாம்.

இதனால் புதிய ரேஷன் கார்டு பெறும் பிரச்சினைக்கும், போலி ரேஷன் கார்டு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும். தொழில்நுட்பம் அடிப்படையிலான ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தால் இது சாத்தியம் ஆகியுள்ளது.   இந்த திட்டத்தினால்  இதுவரை 7 கோடி பேர் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருள் பெற்று பலன் அடைந்துள்ளனர்.”

எனத் தெரிவித்துள்ளார்.