டில்லி

தேர்தல் தோல்வியையொட்டி 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி உத்தரவுப்படி ராஜினாமா செய்துள்ளனர்.

நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யுமாறு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டார். அதையொட்டி கோவா, உத்தரகாண்ட் மாநில தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

மேலும் உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு, கட்சியின் தோல்விக்குப் பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.  அஜய்குமார் லல்லு, ‘உத்தரப்பிரதேச தேர்தல் தோல்விக்குத் தார்மீக பொறுப்பேற்று, எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்’ எனத் தெரிவித்தார்.

இன்று காலை பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து, தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று  தனது பதவியை ராஜினாமா செய்தார். உத்தரப்பிரதேச தேர்தல் தோல்வி குறித்து உத்தரப்பிரதேச தேர்தல் பொறுப்பாளரும், கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து மாநில தலைவர்கள் ராஜினாமா செய்வது  குறிப்பிடத்தக்கதாகும்.