சென்னை

தொடர் விடுமுறையையொட்டி ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தற்போது அரையாண்டு விடுமுறை, வார விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை எனத் தொடர் விடுமுறை வருவதால், விடுமுறை மற்றும் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக வெளி மாவட்டங்களில் பணிபுரியும் மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லத் தொடங்கி உள்ளனர்.

குறிப்பாகச் சென்னை மற்றும் பெங்களூருவில் தங்கி பணிபுரிந்துவரும் மக்கள், வாகனங்கள் மூலமாக தங்களது சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டு வருவதால், முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இங்கு சுமார் 5 கிலோமீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் ஏராளமான தமிழர்கள் வசித்துவரும் நிலையில், அவர்களும் சொந்த ஊர்களுக்கு  செல்கின்றனர். எனவே அத்திருப்பள்ளி சுங்கச்சாவடி, கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி, தருமபுரி-தொப்பூர் சுங்கச்சாவடி, சேலம்-ஓமலூர் சுங்கச்சாவடி ஆகிய 4 சுங்கச்சாவடிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.