சென்னை: தமிழ்நாட்டில் கனமழை  6ந்தேதி வரை நீடிக்கும் என அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், 19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில், சென்னை உ ள்பட பல்வேறு பகுதிகளில்  விட்டு விட்டு லேசானது முதல்  கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை வரும் 6ஆம் தேதி வரை  தொடர வாய்ப்பிருப்பதாக சென்னை வானில ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 இந்த நிலையில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்கிறது. ஒரு சில மாவட்டங்களில் கனமழையும் பெய்கிறது.  தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிக கனமழையும், மேலும் 2 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

அதன்படி தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது. நேற்றிரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. மேலும் 6-ந்தேதி வரை கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை மாவட்டம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழை, பலத்த மழையாக வலுபெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. பொதுவாக வடகிழக்கு பருவமையையை பொறுத்தவரை கடந்த அக்டோபார் 1ஆம் தேதி ஆரம்பித்த பருவமழை தற்போது வரை 19 செ.மீ பெய்திருக்க வேண்டும். ஆனால், இத்தனை நாட்கள் மழை பெய்தும் 12 செ.மீ மழை மட்டுமே அதிவாகியுள்ளது. இதனால், பிற பருவமழை காலங்களை விட, இந்த ஆண்டு 40% குறைவாகவே மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார்.

மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் ஆகிய 19 மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் இருந்தே வானம் இருள் சூழ்ந்து காணப்பட்டது. மழையும் விட்டு விட்டு பெய்கிறது. மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்தது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் பில்லூர் அணை, மேட்டுப்பாளையத்தில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது. கமுதி, சிவகிரி, சென்னை ஆலந்தூர் ஆகிய பகுதிகளில் 12 செ.மீ., புழல், அதிராமபட்டினம் தலா 11 செ.மீ., சிங்கணபுரி 10 செ.மீ., மீனம்பாக்கம், சென்னை விமான நிலையம் தலா 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.