சென்னை:

சென்னை உயர் நீதிமன்றத்தின் கடைசி நேர தலையீட்டால்,எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் நடத்த இருந்த ஸ்ட்ரைக் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.


அனைத்து எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கும் சரக்கு ஏற்றிச் செல்லும் வாய்ப்பு வழங்கக் கோரி, தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுத்தப் போவதாக அறிவித்தனர்.

இதனை எதிர்த்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வேலை நிறுத்தப் போராட்டத்தை அனுமதித்தால், எல்பிஜி சிலிண்டர் பற்றாக்குறை ஏற்படும் என்றும், 22 கோடிக்கும் மேற்பட்ட நுகர்வோர் பாதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மாநில சிவில் சப்ளை ஆணையர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ், டேங்கர் லாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, வேலை நிறுத்தத்தை தடுக்கும் வகையில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் தலைமை நீதிபதி பால் வசந்தகுமாரை இரு தரப்பு சமரசத்துக்காக நடுவராக நியமித்தார்.

எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் மற்றும் சிலிண்டர் நிறுவனங்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகளை நடுவர் தீர்ப்பார்.

நீதிமன்றத்தில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கொடுத்த உறுதியை மீறி வேலை நிறுத்தம் செய்தால், அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றார்.