திருச்சி: மாத்திரை வடிவில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தியதன் விளைவால், திருச்சிப் பகுதியில் பல இளைஞர்கள் உடல்நலன் பாதிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; திருச்சியின் காட்டூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற 20 வயதுடைய இளைஞர், கண் எரிச்சல் மற்றும் வயிற்றுவலியால் சில நாட்களாக அவதிப்பட்டு வந்ததால், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், டைடல் வலிநிவாரணி மாத்திரையை சூர்யா உட்கொண்டு வந்ததைக் கண்டறிந்துள்ளனர். எனவே, இதுதொர்பாக மேற்கொண்ட விசாரணையில், திருவெரும்பூரைச் சேர்ந்த தினகரன், காட்டூர் பகுதியைச் சேர்ந்த சூரியார் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் ஆகியோரின் மூலமே அந்த மாத்திரையின் அறிமுகம் கிடைத்ததாக தெரிவித்தார்.

இதனையடுத்து மேற்கண்ட மூவரும் கைது செய்யப்பட்டனர். இந்த மாத்திரைக்கு திருச்சி மாநகரில் பல இளைஞர்கள் அடிமையாகி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த போதையால் பல உடல்நலக் கோளாறுகளுக்கு ஆளாகின்றனர் இளைஞர்கள்.

கைது செய்யப்பட்டவர்கள், இந்த மாத்திரையை புதுச்சேரியிலிருந்து வாங்கி வந்து பயன்படுத்துவதோடு அல்லாமல், தேவையானவர்களுக்கு 10 மாத்திரைகளை ரூ.250 என்ற விலைக்கு விற்றதும் கண்டறியப்பட்டது.