சென்னை:  கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை  2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கொரோனா நோயாளிகள் இல்லாத மருத்துவமனையாக மாறி உள்ளது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையிலிருந்து அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருப்பது மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் இருந்த அனைவரும்  குணமடைந்து வீடு திரும்பியதால் கொரோனா நோயாளிகளே இல்லாத மருத்துவைமனையாக இன்று மாறி உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவமனை டீன் தேரணி ராஜன், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். மருத்துவத்துறை ஊழியர்களின் தொடர் தொண்டால் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக குறைந்துள்ளது. வயது முதிந்தவர்கள் பலர் கொரோனா தொற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். 100 வயதை நெருங்கிய முதியவர்களையும் கொரோனா தொற்றில் இருந்து மீட்டிருக்கிறோம். கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் அவசர ஊர்திகள் வரிசைகட்டி நின்ற மருத்துவமனையில் இன்று கொரோனா நோயாளிகள் இல்லை.

பல மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 10க்கும் குறைவாகவே உள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.

இவ்வாறு கூறினார்.