சென்னை- நங்கநல்லூரில் பிரசித்திப் பெற்ற ஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது ஸ்ரீகுருவாயூரப்பன் திருக்கோயில். சிறிய கோயில்தான் என்றாலும், மிகவும் அழகாக, கேரள பாணியிலேயே அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலயத்தைப் பார்க்கும்போதே ஒரு நிம்மதி பரவுகிறது.

ஸ்ரீகுருவாயூரப்பன் ஆஸ்திக சமாஜம் எனும் அமைப்பினரால், சுமார் 40 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது இந்த ஆலயம். வருடத்தின் முக்கியமான பண்டிகைகளும் விரத காலங்களும் இங்கு முறையே அனுஷ்டிக்கப்பட்டு, அந்த நாட்களில் ஸ்ரீகுருவாயூரப்பனுக்கு சிறப்பு பூஜைகளும் அலங்காரங்களும் கோலாகலமாக நடைபெறுகின்றன.

திருமண பாக்கியம், பிள்ளை வரம் என ஸ்ரீகுருவாயூரப்பனிடம் நமது மனக்குறை எதுவாகிலும் சொல்லி முறையிட்டுப் பிரார்த்தனை செய்தால் போதும்… குறையைத் தீர்த்தருளி, விரைவில் நம் கோரிக்கையை நிறைவேற்றித் தந்தருள்வார் என்று பெருமிதத்துடன் சொல்கின்றனர் பக்தர்கள். இங்கே, பூஜைகளும் கேரள முறைப்படியே நடைபெறுகின்றன. இங்கே உள்ள கடவுள் விக்கிரகங்களும் கேரளாவில் இருந்தே வடித்து அனுப்பப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டவைதான்.

வியாழக்கிழமைகளில் இங்கு வந்து குருவாயூரப்பனைப் பிரார்த்தித்தால் நினைத்தது விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை. தவிர, வியாழக்கிழமைகளில் பெண்கள் கூட்டமாகச் சேர்ந்து, நாராயணீயம் வாசிப்பது இங்கே வழக்கம்.

கேரளாவைப் போல் ‘விஷ§க்கனி’ என்று சொல்லப் படும் சித்திரை மாதப் பிறப்பில் இருந்து ஒரு வருடம் வரைக்குமான விழாக்களும் பண்டிகைகளும் இங்கே நடைபெறுகின்றன. கேரள விழாக்கள் மற்றும் தமிழகப் பண்டிகைகள், விசேஷங்கள் ஆகிய நாட்களில் சிறப்பு அலங்காரம், விசேஷ பூஜைகள், ஹோமங்கள் எனக் கொண்டாடப்படுகின்றன, இங்கே. இந்த முறை பிரம்மோத்ஸவ விழாவைக் கொண்டாட கோயில் நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.

ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீபகவதி முதலானோருக்கும் சந்நிதிகள் உள்ளன. ஐப்பசியில் இங்கு நடைபெறும் தன்வந்திரி ஹோமத்தில் கலந்துகொண்டால், தீராத நோயும் தீரும் என்பர். மார்கழியில் ஸ்ரீகிருஷ்ணருக்குச் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. குறிப்பாக, கோகுலாஷ்டமி நன்னாளில் சிறப்பு பூஜைகள், விசேஷ நைவேத்தியங்கள், சொற்பொழிவு மற்றும் பஜனைகள் எனக் கோயில் களைகட்டி இருக்குமாம்.

கிருஷ்ண ஜயந்தி நாளில் பூஜையில் பங்கேற்று, ஸ்ரீகுருவாயூரப்பனை வேண்டுங்கள். நிகரில்லாக் குழந்தைச் செல்வத்தைத் தந்தருள்வார் குருவாயூரப்பன்.