குஜராத் மாநிலத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுண்ணாம்பு மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட மொத்த மாத்திரைகளின் மதிப்பு ரூ. 17.5 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அகமதாபாத் நகரில் போலி மாத்திரைகள் புழக்கத்தில் உள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கிம்மராம் குமார் என்பவரிடம் இருந்து 99 பெட்டிகள் POSMOX CV 625 என்ற மாத்திரை கைப்பற்றப்பட்டது.

அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் இந்த மாத்திரைகள் அனைத்தும் பொதுவாக சுண்ணாம்பு என்று கூறப்படும் கால்சியம் கார்பனேட் வேதிப்பொருளால் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் இதேபோல் 5க்கும் மேற்பட்ட மாத்திரை பெயர்களில் கால்சியம் கார்பனேட் கலந்து விற்பனை செய்வது தெரியவந்தது.

இதனையடுத்து இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில் போலி முகவரி கொடுத்து போலி நிறுவனங்கள் மூலம் இதுபோன்ற சுண்ணாம்பு மாத்திரைகள் தயாரிக்கப்படுவதாகவும் இவற்றை மற்ற மருந்து நிறுவனங்களைப் போல மெடிக்கல் ரெப்ரெசென்ட்டடேடிவ் மூலம் மருத்துவர்களிடம் மார்க்கெட்டிங் செய்து விற்பனை செய்துவருவது தெரியவந்தது.

அகமதாபாத் மட்டுமன்றி சூரத், நாடியாட் மற்றும் ராஜ்கோட் ஆகிய நகரங்களில் விற்பனை செய்தது தெரியவந்ததை அடுத்து மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் மொத்தம் சுமார் 17.5 லட்ச ரூபாய் சந்தை மதிப்புள்ள சுண்ணாம்பு மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த மருந்து பெட்டிகளின் மீது இருந்த தயாரிப்பு நிறுவனம் குறித்து ஹிமாச்சல் பிரதேச அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் ஹிமாச்சல் பிரதேசத்தில் இதுபோன்ற எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் இல்லை என்று தெரியவந்ததை அடுத்து இந்த சுண்ணாம்பு மாத்திரைகள் எங்கு தயாரிக்கப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.