சென்னை:  டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை எழுத்துத் தேர்வின் முடிவுகள்  டிசம்பரம் முதல் வாரத்தில் வெளியாகும் என அமைச்சர் தங்கம் தென்னரசு  தெரிவித்து உள்ளார்.

தமிழக அரசுத் துறைகளில் தொகுதி 2, 2 ஏ பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க கடந்த ஆண்டு (2022)பிப்ரவரி மாதம்  23-ஆம் நாள் வெளியிடப்பட்டது. அத்தேர்வுகளில் பங்கேற்பதற்காக விண்ணப்பித்த 11.78 லட்சம் பேரில், 9.94 லட்சம் பேர் கடந்த ஆண்டு மே மாதம் 21-ஆம் நாள் நடத்தப்பட்ட முதனிலைத் தேர்வை எழுதினார்கள். அவர்களில் இருந்து ஒரு பணிக்கு 10 பேர் வீதம் 52,180 பேர் முதன்மைத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கடந்த பிப்ரவரி 25-ஆம் நாள் நடத்தப்பட்ட முதன்மைத் தேர்வுகளை அவர்களில் பெரும்பான்மையினர் எழுதினர். அத்தேர்வுகளின் முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதமே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 9 மாதங்களாகியும் இன்று வரை வெளியிடப்படவில்லை. தொகுதி 2, 2ஏ பணிகளுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகளை 9 மாதங்களாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடாமல் இருப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை. முதன்மைத் தேர்வை எழுதியவர்கள் வெறும் 52,000 பேர் மட்டும் தான். முதன்மைத் தேர்வில் ஒவ்வொரு போட்டியாளரும் 2 தாள்களை எழுத வேண்டும்; அதன்படி மொத்தம் 1.04 லட்சம் விடைத்தாள்களை திருத்த வேண்டும். அவை அனைத்தும் இரண்டே வகைப்பட்டவை தான். அவற்றை மிக எளிதாக திருத்தி விட முடியும். ஆனாலும், அப்பணியை அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்யவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் தேர்வு எழுதியவர்களும் தேர்வு முடிவுகள் எப்போது வரும் என எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதமில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.

பத்திரிகைகளில் வந்த செய்திகளை சுட்டிக்காட்டி  பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு,  டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை எழுத்துத் தேர்வின் முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும். மதிப்பீட்டு பணிகள் செவ்வனே நடைபெற்று 80 சதவீதத்துக்கும் மேல் நிறைவு பெற்றுள்ளன. எஞ்சியுள்ள பணிகள் டிசம்பர் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு சுமார் 8,000 பேருக்கு முதல்வர் பணி நியமன ஆணை வழங்குவார் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 13,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன. அண்மையில் முதலமைச்சரால் குரூப் 4 பணியில் தேர்வு பெற்ற 10,000-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 2023-24ம் ஆண்டில் மேலும் சுமார் 10,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.

குரூப் 2, 2ஏ பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வில் கட்டாயத் தமிழ் தகுதித்தாள் மற்றும் பொது அறிவு தேர்வு பிப்.25-ல் நடைபெற்றது. இப்பணி துவக்கப்பட்ட மார்ச் மாதத்தில் தேர்வாணையத்தில் ஒரு கணிப்பொறி ஆய்வகம் மட்டுமே இருந்தது. வேறு சில தேர்வுகளின் எழுத்துத் தேர்வு விடைத்தாள்களும் திருத்த வேண்டிய நிலை இருந்ததால் சற்றே தாமதமானது.

முதலமைச்சர் உத்தரவின் பேரில் சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 2-வது கணிப்பொறி ஆய்வகம் அமைக்கப்பட்டது. எனவே டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதமில்லை என்று குறிப்பிட்டார்.

மேலும்,  தேர்வு முடிவுகளை வெளியிட மத்தியஅரசு பணியாளர் குடிமைப்பணி தேர்வாணையம் எடுத்துக் கொள்ளும் கால அளவு 5 மாதம். மத்திய அரசு தேர்வாணைய செயல்திறனைவிட மாநில தேர்வாணைய செயல்திறன் எந்த வகையிலும் குறைவானது இல்லை. தேர்வு மதிப்பீட்டுப் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன என்றார்.