சென்னை: மகளிர் உரிமை திட்ட  பயனர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு வரும் 10ந்தேதியே பணம் வரவு வைக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, இந்த திட்டத்தில் விடுபட்டு மேல்முறையீடு செய்தவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கி உள்ளதாக தெரிவித்து உள்ளது.

தமிழ்நாடு அரசு களிர் உரிமைத்தொகை திட்டம்  என்ற பெயரில் தகுதவாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கி வருகிறது. பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தொடங்கப்பட்டு இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறி வருகிறார்.

இந்த திட்டம் அண்ணா பிறந்தநாளான கடந்த செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.  இந்த திட்டத்தில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்குக்கு ரூ.1,000 உரிமைத் தொகை செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களில், சுமார் 55லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர்கள், மீண்டும் முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டு  தமிழக அரசு சார்பாக கால அவகாசம் வழங்கப்பட்டது.  அதன்படி,  தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25ம் தேதி வரை சுமார் 11.85 லட்சம் பேர் ரூ.1000 கேட்டு மீண்டும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் விண்ணப்பங்களை தமிழக அரசின் வருவாய்த்துறை அதிகாரிகள் களஆய்வு செய்தனர்.

அதன்படி, இவர்களில் 8 ட்சம் பேர் ரூ.1000 உரிமைத் தொகை பெற தகுதிவாய்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் இன்றுமுதல் குறுஞ்செய்தி அனுப்பும் பணிகள் தொடங்கியுள்ளன.விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகிறது.

புதிதாக மகளிர் உரிமைத் தொகை பெறுபவர்களுக்கு வரும் 10ம் தேதி முதல் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்பட உள்ளது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் மரக்காணத்தில் தொடங்கி வைக்க இருக்கிறார்.

தீபாவளி பண்டிகை வருகிற 12ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் வரும் 10ம் தேதி முதல் விடுபட்டவர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.