சென்னை: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் பிறந்தநாளை யொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசன், இன்று (நவ.7) தனது 69வது பிறந்தநாளைக் கொண்டாடு கிறார்.  இதையொட்டி அவருக்கு அரசியல் மற்றும்  திரைப்பிரபலங்கள்  வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.  இந்த நிலையில்,  திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்  கமல்ஹாசனுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டு உள்ள X  பதிவில், “கலையுலகில் சாதனைகள் பல படைக்கும் கலைஞானி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். நலம் சூழ வாழிய பல்லாண்டு” என தெரிவித்து உள்ளார்.

 உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில் “திரையுலக கனவுகளோடு வருபவர்களுக்கு மட்டும் அல்ல எல்லா தரப்பினரையும் ரசிக்கச் செய்யும் உலக நாயகன் கமல்ஹாசன் சார் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் கலைஞானி என்று போற்றப்பட்ட கமல் சார், இந்திய திரை உலகின் முக்கிய அடையாளம் என்பது நமக்கெல்லாம் பெருமை. கலைத் துறையின் முன்னேற்றத்திற்காக மட்டுமின்றி அரசியல் சமூக நீதி தளங்களிலும் அவரது பங்களிப்பு போற்றுதலுக்குரியவை” என்று கூறி உள்ளார்.

கேரளா முதல்வர் கணநாயகி விஜயன் வெளியிட்ட வாழ்த்து பதிவில் “நீங்கள் ஒரு சிறந்த கலைஞராகவும் சமூக மற்றும் அரசியல் ஆர்வலராக வும் மக்களின் இதயங்களில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளீர்கள். உங்களுக்கு மேலும் பல மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வருடங்கள் அமைய வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பிரபல நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பூ வெளியிட்ட பதிவில், “ஹாப்பி பர்த்டே கமல்ஹாசன் சார்.. உங்கள் மேல் நான் வைத்திருக்கும் அன்பையும் மரியாதையும் விவரிக்க வார்த்தைகள் இல்லை” என்று  பதிவிட்டுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினரான அன்புமணி ராமதாஸ் அவர்கள் வெளியிட்டிருந்த பதிவில் “மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், தமிழ் திரை உலகின் சாதனை சிகரமான கமல்ஹாசன் இன்று அவரது 69வது பிறந்தநாளை கொண்டாடும் வேளையில்.. அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் தமிழக மக்களுக்கு அவர் நீண்ட காலம் பணியாற்ற எனது வாழ்த்துக்கள்” என்று தெரிவித்து உள்ளார்.