சென்னை: மயிலாடுதுறை சென்றிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான கருப்புகொடி போராட்டம், அவரது வாகனம் மீதான கருப்புகொடி கம்பங்களை எறிந்தது போன்ற விவகாரங்கள் சர்ச்சையாகி உள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
மயிலாடுதுறை தருமபுரி ஆதீனம் நிகழ்ச்சிக்கு சென்ற ஆளுநருக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் கருப்புகொடி போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டக் காரர்கள் ஆளுநர் வாகனத்தை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதை காவல்துறையினர் தடுத்து நிறுத்திய நிலையில், ஆளுநர் வாகனம்மீது சிலர் கொடி கம்புகளை விசி எறிந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் பாதுகாப்பு அதிகாரி, டிஜிபிக்கு அவசர கடிதம் எழுதி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
ஆளுநர் வாகனம் மீதான தாக்குதல் கண்டனத்துக்கு உரியது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருந்த நிலையில், சட்டம் ஒழுங்கு டிஜிபி அப்படி ஏதும் தாக்குதல் நடைபெறவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இது முரண்பட்ட தகவலாக உள்ளது. இதற்கிடையில், பாஜக தலைவர் அண்ணாமலை, முதல்வர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். அதிமுகவும் தமிழகஅரசுக்கு கண்டனம் தெரிவித்த உள்ளது. இந்த விவகாரம் பூதாகாரமானதாக எழுந்துள்ள நிலையில், மயிலாடுதுறையில் என்ன நடந்தது என்பது குறித்த சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
இன்றைய சட்டப்பேரவை நிகழ்வின்போது, நேரமில்லா நேரத்தில் ஆளுநருக்கு எதிரான போராட்டம் பற்றி அதிமுகவினர் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் பதில் அளித்தார். ஆளுநருக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி விரிவான விளக்கம் அளித்துள்ளார். ஆர்ப்பாட்டத்தின் போது ஆளுநர் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என ஏடிஜிபி விளக்கம் அளித்துள்ளதாக முதல்வர் குறிப்பிட்டார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை போலீசார் தடுப்புகள் வைத்து கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
ஆளுநரின் கான்வாய் கடந்து சென்ற பின்பே கையில் வைத்திருந்த கருப்புக்கொடிகளை போராட்டக்காரர்கள் வீசினர். ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி டிஜிபிக்கு எழுதிய கடிதத்திலும் ஆளுநர் வாகனம் மீது எவ்வித கொடிகளும் வீசப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. எந்தவித பாதிப்பும் இல்லாமல் ஆளுநர் கான்வாய் அந்த இடத்தை கடந்துவிட்டதாக ஆளுநர் பாதுகாப்பு அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால் ஆளுநருக்கு எதிரான போராட்டத்தை அரசியலுக்கு பயன்படுத்த எதிர்க்கட்சி தலைவர் திட்டமிட்டு அறிக்கை வெள்ளியிட்டுள்ளார். வழக்கமாக அதிமுக தலைவர்கள் இணைந்து அறிக்கை வெளியிடும் நிலையில் ஆளுறுர் விவகாரத்தில் தனித்தனியே அறிக்கை வெளியிட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று ஓபிஎஸ் அறிக்கை நியாயமாக உள்ளது.
ஐ.ஜி தலைமையில் 2 டி.ஐ.ஜி.க்கள், 6 மாவட்ட எஸ்.பி.க்கள் உள்பட 1400-க்கும் மேற்பட்ட போலீஸ் குவிக்கப்பட்டு ஆளுநருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டது. ஆளுநருக்கான பாதுகாப்பில் அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது. ஆளுநரின் பாதுகாப்பை வைத்து அரசியல் செய்ய நினைத்தால் ஒருபோதும் நடக்காது. 1995-ல் திண்டிவனம் அருகே ஆளுநர் சென்னாரெட்டி வாகனம் 10 நிமிடங்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது. ஆளுநருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டது. ஆளுநர் சென்னாரெட்டி வாகனம் மீது கல், முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆளுநர் சென்னா ரெட்டி உயிர் தப்பினார் என்பது அடுத்த நாள் அனைத்து நாளிதழ்களில் செய்தி வந்தது. அதிமுக ஆட்சியில் ஆளுநர் சென்னா ரெட்டிக்கு என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். தாக்குதல் நடத்தியதுடன் ஆளுநர் சென்னா ரெட்டியை திரும்ப பெற வேண்டும் என அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மீது விமான நிலையத்திலேயே அதிமுக ஆட்சியில் தாக்குதல் நடத்தப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து தப்பி வந்து ஓட்டல் வந்த பிறகும் ஓட்டல் மீது கல் வீசப்பட்டது.
தற்போது நடக்காத ஒன்றை நடந்ததாக கற்பனை செய்து கொண்டு அரசியல் செய்ய வேண்டாம் என்று எதிர்க்கட்சி தலைவர், துணை தலைவருக்கு முதல்வர் வேண்டுக்கோள் விடுக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆளுநரின் கார் மீது கருப்பு கொடி வீசியது ஏற்புடையதல்ல! திருமாவளவன் கண்டனம்