சென்னை: மயிலாடுதுறையில் ஆளுநரின் வாகனத்தை நோக்கி கருப்புக்கொடி வீசப்பட்டதை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக மற்றும் பாஜக உறுப்பினர்கள்  வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய அமர்வில், மயிலாடுதுறையில் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்தப்பட்டது மற்றும் அவரது வாகனத்தின்மீது கருப்புகொடி கம்புகளை வீசியது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி  கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது தமிழ்நாட்டில், ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை’ என்று கூறியவர் ஒரு மாநிலத்தின்  ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாதபோது, சாமானிய மக்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து, ஆளுநர் பாதுகாப்பு குறைபாடு கருப்புக் கொடி போராட்டத்தை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.. அதைத்தொடர்ந்து பாஜக உறுப்பினர்களும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த அ.தி.மு.கவினர் இன்றைய சபை நிகழ்ச்சிகளை முழுவதும் புறக்கணித்து கோட்டையை விட்டு வெளியே சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, “ஆளுநரின் வாகனம் வரும் வழியிலேயே போராட்டத்திற்கு அனுமதி அளித்தது அதிர்ச்சி அளிக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போராட்டம் நடத்தியவர்களை முன்னதாகவே அப்புறப்படுத்தி இருக்க வேண்டும். ஆளுநருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பது தமிழக காவல்துறைக்கு விழுந்த கரும்புள்ளி” என்றார்.