சென்னை: தமிழகஅரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக அவர்கள்  ஓய்வுபெறும் நாளில் பணி நீக்கம் செய்யப்படும் நடைமுறையை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இது அரசு ஊழியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

புகார்களில் சிக்கும் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் இடைநீக்கம் செய்யப்படுவது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது. இந்த நடவடிக்கை கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியதுண்டு. மாநில அரசு மற்றும் அமைச்சர்களின் நெளிவு சுளிவுகளுக்கு வளையாத அதிகாரிகளை பழிவாங்க அவர்கள் ஓய்வுபெறும் நாளில் இடைநீக்கம் செய்யப்பட்டு, அவர்களது ஓய்வூதிய பணப்பலன்கள் பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

தற்போது ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு,  ஓய்வுபெறும் நாளில் அரசுப் பணியாளர்கள் தற்காலிகப் பணிநீக்கத்தில் வைக்கும் நடைமுறையை நீக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் இதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். அது தற்போது நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,  “அரசு ஊழியர் ஆசிரியர் பணி சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகளை பரிசீலித்து, 07.09.2021 அன்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110ன் கீழ் ஓய்வுபெறும் நாளில் அரசுப் பணியாளர்கள் தற்காலிகப் பணிநீக்கத்தில் வைக்கும் நடைமுறை தவிர்க்கப்படும் என்ற அறிவிப்பை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டார்.இந்த நிலையில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும்,தவறு செய்யும் அரசு ஊழியர்களைத் தடுக்கவும் அவர்களைச் சீர்படுத்தவும் அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒழுக்காற்று நடவடிக்கையை இறுதி செய்தவுடன், நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை விதிக்கப்படுகிறது. சில சமயங்களில், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாள் வரை ஒழுங்கு நடவடிக்கைகள் நீட்டிக்கப்பட்டு, இழுத்தடிக்கப்படுகின்றன, மேலும் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நிலுவையில் உள்ள  ஒழுங்கு நடவடிக்கைகளை இறுதி செய்வதில் இத்தகைய தாமதத்தைத் தவிர்க்க, தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

தகுதிவாய்ந்த அதிகாரி தனிப்பட்ட முறையில் நிலைமையை மதிப்பிட்டு, அரசு ஊழியர்கள் மீது நிலுவையில் உள்ள குற்றச்சாட்டுகள் பணிநீக்கம் அல்லது நீக்கம் செய்யப்படுவதற்கு உத்தரவாதமளிக்கும் அளவுக்கு தீவிரமானவை என்பதையும், முதன்மையான பார்வையில் நிரூபிக்கப்பட வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.