செஞ்சி அருகே ஊராட்சி மன்றத் தலைவர் பதவி 13 லட்சம் ரூபாய்க்கு ஏலம்! கலெக்டர், காவல்துறையினர் விசாரணை…

Must read

விழுப்புரம்: செஞ்சி அருகே ஊராட்சி மன்றத் தலைவர் பதவி 13 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மாவட்ட கலெக்டர், மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள்  காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்படாத  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி உள்பட 9 மாவட்டங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அதற்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், பல ஊர்களில் ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் பதவி ஏலம் விடப்படும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவிற்குட்பட்ட பொண்ணங்குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் பதவி 13 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த மற்றொரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து, அங்கு செஞ்சி வட்டாட்சியர் ராஜன், செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவன், காவல்துறையினரை பொண்ணங்குப்பம் பகுதியில் சென்று விசாரணை நடத்தினர். அவர்களிடம் அநத்   மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களின் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும், விரைவில் பொண்ணங்குப்பம் தனி ஊராட்சியாக  அறிவிக்கப்படவில்லை என்றால், தேர்தலைப் புறக்கணிக்கவுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து அங்கு வந்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன்  பொண்ணங்குப்பம், துத்திப்பட்டு கிராம மக்களிடம்பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அம்மக்களும் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் கூறியுள்ளனர்.

More articles

Latest article